இறைவல்லமையும், இறைப்பராமரிப்பும்
இன்றைய நற்செய்தியில் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-4) இயேசு காற்றையும், கடலையும் அமைதிப்படுத்துகின்ற புதுமையை நாம் பார்த்தோம். கடலில் புயற்காற்று எழகிறது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. ஆனால், இயேசுவோ அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார். புயற்காற்று அடித்து, படகில் தண்ணீர் இருக்கிறபோது, இயேசுவால் இவ்வளவு அமைதியாக தூங்க முடிகிறது? என்ற கேள்வி எழுவது இயல்பு. ஒருவேளை இயேசுவின் உடல் மிகவும் களைப்பாக இருந்திருக்கலாம். ஓய்வில்லாத நற்செய்திப்பணி அவருக்கு களைப்பைக்கொடுத்திருக்கலாம். எனவே, அடிக்கடி படகில் பயணம் செய்து, கடலின் இரைச்சலுக்கும், அலைகளுக்கும் பழகிவிட்ட இயேசுவுக்கு, வெளியில் நடப்பது ஒன்றும் பெரிதாகத் தெரியாமல் இருந்திருக்கலாம்.
சற்று ஆழமாக இந்த இறைவார்த்தையைச் சிந்திக்கிறபோது, அதிலே மறைந்து கிடக்கிற இறையியலை நாம் உணர முடிகிறது. இயேசு கடும்காற்றுக்கு மத்தியில் அமைதியாகத் தூங்குவது, சாதாரண நிகழ்வல்ல. அது இறைவன் மீது வைத்திருக்கக்கூடிய ஆழமான நம்பிக்கை. இறைப்பராமரிப்பில் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதனின் தன்னிகரற்ற விசுவாசம். கடவுள் மீது நம்பிக்கை இருந்தால், சீறி எழுகிற அலையும், பொங்கி எழும் கடலும் ஒரு பொருட்டல்ல என்பதுதான், அது நமக்கு உணர்த்துகிற உண்மை. அந்த நம்பிக்கை விழித்திருக்கக்கூடிய சீடர்களுக்கு இல்லை. ஆனால், தூங்கிக்கொண்டிருக்கிற இயேசுவுக்கு இருக்கிறது. கடவுளின் வல்லமையைத்தாண்டி இந்த உலகத்தில் எதுவும் நடக்காது என்கிற, ஆழமான விசுவாசத்தை இங்கே நாம் பார்க்க முடிகிறது.
பிரச்சனைகளும், துன்பங்களும் நம் அன்றாட வாழ்வில் இருக்கக்கூடியவை. நம்மை பயமுறுத்தக்கூடியவை. வாழ்வு முடிந்து விட்டதோ என்று நம்மை நினைக்க வைப்பவை. ஆனாலும், கடவுளின் பராமரிப்பிலும், வல்லமையிலும் நாம் நம்பிக்கை வைத்தால், எதுவும் நம் கைமீறிப்போகாது. அத்தகைய ஒரு வரத்தை, ஆண்டவரிடத்தில் நாம் கேட்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்