இறைவன் விரும்பும் விழாக்கள்
ஆமோஸ் 5: 14 – 15, 21 – 24
“உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்” என்று படைகளின் கடவுள் சொல்வதாக, ஆமோஸ் இறைவாக்கு உரைக்கின்றார். இணைச்சட்டம் 23: 14 ல் கடவுள் சொல்கிறார்: “நீ எனக்கு ஆண்டிற்கு மூன்றுமுறை விழா எடுப்பாய்”. இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் விழா எடுக்கச் சொல்கிறார். ஆனால், இறைவாக்கினர் ஆமோஸ், இறைவன் விழாக்களை அருவருப்பதாக இறைவாக்கு உரைக்கின்றார். இதை எப்படி புரிந்து கொள்வது?
இஸ்ரயேல் மக்கள் கொண்டாடும் விழாக்களில் முக்கியமானது பாஸ்கா விழா. இந்த விழா, கடவுள் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடந்து போகும் நிகழ்வை நினைவுபடுத்துகிறது. கூடாரத்திருவிழா, இஸ்ரயேல் மக்கள் நாற்பது ஆண்டு காலம் பாலைவனத்தில் வாழ்ந்ததையும், அவர்களை இறைவன் உணவில்லாத, நீரில்லாத பாலைவனத்திலும் அற்புதமாக வழிநடத்தியதையும் குறிக்கிறது. மற்ற விழாக்களில் இஸ்ரயேல் மக்கள் செலுத்தும் காணிக்கைகள் குறிப்பாக, அறுவடையிலிருந்தும், தங்களுடைய கால்நடையிலிருந்தும் செலுத்தும் காணிக்கைகள், அவர்கள் கடவுள் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு, தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் அடையாளங்களாகக் காணப்படுகிறது. இவையனைத்துமே, கடவுள் அவர்களிடத்தில் கொண்டாடுவதற்கு கேட்டுக்கொண்ட விழாக்கள் தான். ஆனால், இந்த அடையாளக் கொண்டாட்டங்களை வைத்தும், சடங்குகளை வைத்தும், தாங்கள் செய்கிற தவறுகளை மறைத்து விடலாம் என்று நினைத்தால், அது தவறு. அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால், இறைவன் ஏழைகளின் சார்பாக, எளியவர்களின் சார்பாக நிற்கும் கடவுள். அவர்களுக்கு அநீதி செய்துவிட்டு, கடவுளுக்கு திருவிழா எடுத்தால், அது கடவுளால் நிச்சயம் வெறுக்கப்படும் நிகழ்வாகத்தான் இருக்கும் என்பதை, இறைவாக்கினர் ஆமோஸ் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.
நாம் எடுக்கிற விழாக்கள் வெறுமனே நினைவுகூறுவதற்காக மட்டுமல்ல. இன்றைய யதார்த்த வாழ்விலும் அது எதிரொலிப்பதாக இருக்க வேண்டும். அவர்களை நீதியின்பால் வழிநடத்துவதாக இருக்க வேண்டும். அவர்களை நேர்மையானவர்களாக கட்டியெழுப்பதாக அமைய வேண்டும். அப்படிப்பட்ட விழாக்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் விழாக்கள். நம்முடைய விழாக்கள் எப்படி அமைந்திருக்கின்றன? சிந்திப்போம். நம்முடைய வாழ்வை இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்