இறைவன் விடுக்கும் எச்சரிக்கை
திருவெளிப்பாடு 14: 14 – 20
”உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது. மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று, வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின் மீது வீற்றிருந்தவரை நோக்கிக் கூறுகிறார். இந்த காட்சி, உலக முடிவைப் பற்றி எடுத்துரைக்கிறது. திருவழிபாட்டின் கடைசி வாரத்தில் இருக்கிற நமக்கு, வாழ்வைப் பற்றிய பயத்தை அல்ல, மாறாக, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை வரவேற்பதற்கான ஆயத்தமாக, இந்த வாசகம் நமக்கு தரப்படுகிறது.
விவிலியத்தில், இயேசு எப்போதும் கடவுளை இரக்கமுள்ளவராக அறிமுகப்படுத்துகிறார். கடவுள் நல்லவர், இரக்கமுள்ளவர் என்கிற செய்தி, விவிலியம் முழுமைக்குமாக ஆங்காங்கே காணப்படுகிறது. இன்றைக்கு பல் வியாபாரத்திற்காக கடவுளை, கொடுமையானவராக சித்தரிக்கிறார்கள். மக்களை பயமுறுத்தி, அதன் மூலமாக இலாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் செய்கிறபோது, பயம் நிச்சயமாக இருக்க வேண்டும். அதேவேளையில், கடவுளின் இரக்கத்தின் மீதும் ஒருவருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். யூதாசைப் போல கடவுளின் இரக்கத்தில் நம்பிக்கை இல்லாதவராக, ஒருவர் இறக்கக்கூடாது. மாறாக, இறைஇரக்கத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்து, இயேசுவுக்கு சாட்சியாக மரித்த, பேதுருவின் நம்பிக்கை நமதாக வேண்டும்.
நம்முடைய வாழ்வில், இறைவார்த்தை வழியாக, கடவுள் நம்மை வழிநடத்துகிறபோது, அறிவுறுத்துகிறபோது, நாம் எப்போதும் அவைகளை ஏற்று, நல்ல வழியில் வாழ்வதற்கு முழுமையாக முயற்சி எடுக்க வேண்டும். இறைவனின் அறிவுரைகளை, எச்சரிக்கை வார்த்தைகளாக ஏற்று, இறைவனுக்குகந்த வாழ்வை வாழ, நாம் மன்றாடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்