இறைவன் வாக்குறுதி மாறாதவர்
திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9
இறைவன் வாக்குறுதி மாறாதவர் என்கிற சிந்தனையை திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். வாக்குறுதி என்பது என்ன? ஒரு மனிதர் சக மனிதருக்கு “இதைச் செய்கிறேன்” என்று, உறுதி செய்வது தான், வாக்குறுதி. சொல்கிற வாக்கை நிறைவேற்றுவது வாக்குறுதி. இறைவன் பல வாக்குறுதிகளை, தான் படைத்த மனிதர்களுக்கு வழங்கியிருக்கிறார். தொடக்க நூலில் நாம் பார்க்கிற முதல் மனிதரிலிருந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, நோவா என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. வாக்குறுதி கொடுத்த மனிதர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து தவறியிருக்கிறார்கள். ஆனால், கடவுள் ஒருபோதும் தவறியது கிடையாது.
கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை நிர்பந்தமான வாக்குறுதிகள், நிர்பந்தம் இல்லாத வாக்குறுதிகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நிர்பந்தமான வாக்குறுதி என்பது, மனிதன் இதைச்செய்தால், கடவுளும் செய்வதற்கு கட்டுப்பட்டவர் என்பது பொருள். கடவுள் அனைத்தையும் கடந்தவர் என்றாலும், இந்த உலகத்தின் படைப்பிற்கு காரணமானவர் என்றாலும், கடவுள் மனிதர்களுக்காக தன் நிலையிலிருந்து இறங்கி வருகிறார். நிர்பந்தமில்லாத வாக்குறுதி என்பது, மனிதன் எப்படி இருந்தாலும் கடவுள் எதனையும் எதிர்பாராது தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது. இந்த இரண்டு வாக்குறுதிகளில் முதல் வாக்குறுதிக்கு கடவுள் கட்டுப்பட்டவர். அப்படியிருந்தும் கடவுள், அந்த வாக்குறுதிகளுக்கும் உண்மையுள்ளவராக இருந்தார். மனிதர்களுக்கு நன்மை செய்வதை ஒன்றையே கடவுள் இலக்காகக் கொண்டிருந்தார். இது கடவுள் மனிதர்களின் மீது வைத்திருக்கிற முழுமையான அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இந்த திருப்பாடலின் வழியாக ஆசிரியர் நமக்குக் கற்றுக்கொடுப்பது, கடவுள் நம்மை நிரந்தரமாக அன்பு செய்கிறார் என்பதுதான். நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், கடவுள் நம்மை நிறைவாக அன்பு செய்கிறார். அந்த அன்பிற்கு நாம் உண்மையுள்ளவர்களாக வாழ, இந்த திருப்பாடலை தியானிப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்