இறைவன் வழங்கும் வாக்குறுதி
2அரசர்கள் 11: 1 – 4, 9 – 18, 20
கடவுள் தன்னுடைய ஊழியன் தாவீதுக்கு அவரது வழிமரபு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். யூதாவை ஆள்கிறவர்கள் அவரது வழிமரபினராகத்தான் இருப்பர் என்று கூறுகிறார். அது சாதாரண வாக்குறுதி அல்ல. நிறைவேற்றுவதற்கு எளிதானது அல்ல. ஆனால், கடவுள் தன்னுடைய வல்லமையினால் அதை நிகழச் செய்கிறார். இன்றைய வாசகத்தில், தாவீதின் வழிமரபினர் ஆள்வதற்கு ஏற்பட்ட ஆபத்தையும், இறைவன் அற்புதமாக அந்த வழிமரபைப்பாதுகாத்து, தன்னுடைய வாக்குறுதியை நிலைநாட்டியதையும் பார்க்கலாம்.
அத்தலியா தன்னுடைய மகன் இறந்துவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டு, அரச குடும்பத்திலுள்ள அனைவரையும் கொலை செய்கிறார். இனி இந்த குடும்பத்திலிருந்து யாரும் ஆட்சி செய்யக்கூடாது என்பதுதான் அவளுடைய எண்ணமாக இருக்கிறது. கிட்டத்தட்ட, கடவுளின் வாக்குறுதியை முறியடிக்கிற ஒரு வேட்கை அவளிடத்தில் இருக்கிறது. அவ்வளவுதான், இனி தாவீதீன் அரியணை தளிர்க்க முடியாது என்பது போன்ற சூழலில், யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா, அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக் கொண்டு போய், ஒளித்து வைத்தாள். இறைவன் எப்படியெல்லாம் வரலாற்றில் அற்புதமாக செயல்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி அருமையான உதாரணம். தன்னுடைய வாக்குறுதியை இறைவன் தன்னுடைய வல்லமையினால் நிலைநாட்டி, எக்காலத்திற்குமான உண்மையான, உயிருள்ள தேவன் நானே என்பதை, அவர் அறிவிக்கிறார்.
இறைவன் நமக்கு உண்மையாக இருக்கிறார். தன்னுடைய வாக்குறுதிக்கு ஏற்ப நடந்துகொள்கிறார். ஆனால், பல வேளைகளில் நாம் தான், இறைவனுக்கு உண்மையில்லாதவர்களாக இருக்கிறோம். அவரின் வல்லமை மீது, மாட்சிமை மீது சந்தேகம் கொள்கிறவர்களாக இருக்கிறோம். அதிலிருந்து மீண்டு, இறைவன் மீது முழுமையான நம்பிக்கை உள்ளவர்களாக வாழ முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்