இறைவன் மீதான நம்பிக்கை
2 அரசர்கள் 19: 9 – 11, 14 – 21, 31 – 35, 36
அசீரிய மன்னன் சனகெரிபு, செதேக்கியாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அவன் கடிதம் எழுதுகிறபோது, எத்தியோப்பிய மன்னன் திராக்கா, அவனுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். இந்த திராக்கா பிறப்பால் ஒரு எத்தியோப்பியன். தொடக்கத்தில் நபதாவில் தன்னுடைய ஆட்சியைத் தொடங்கிய அவன், மெல்ல மெல்ல எகிப்து முழுமைக்குமாக தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். பல போர்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். பல வெற்றிகளையும் பெற்றான். குறிப்பாக, அசீரியர்களுக்கு எதிராக பல போர்களில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெற்றான். கிரேக்கர்களால் மிகச்சிறந்த போர்வீரனாக அறியப்படுகிறான். கி.மு.699 ல், அவன் இன்னும் எகிப்தின் அரசனாகவில்லை. எத்தியோப்பியாவின் அரசனாகவே இருந்தான். ஆனால்,எகிப்தை தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே வைத்திருந்தான். அது அசீரிய மன்னன் சனகெரிபின் தாக்குதலுக்கு உட்பட்டதால், அதனைக் காப்பாற்றுவதற்காக, அசீரியர்களுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். அதுதான், இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அசீரிய மன்னன், இதுவரை தான் மேற்கொண்ட போர்களில் யூதர்களுக்கு எதிராக பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டு, இஸ்ரயேலின் கடவுளை நம்ப வேண்டாம் என்று கூறுகிறான். ஏனென்றால் கடவுள், “இஸ்ரயேல், அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்படாது” என்று சொல்லியிருக்கிறார். அசீரியர்கள் பல போர்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல நாடுகளை வெற்றி கண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, நிச்சயம் யூதா அவர்களிடமிருந்து தப்பிவிட முடியாது என்பதை, எச்சரிக்கையாக அசீரிய அரசன் இங்கு குறிப்பிடுகிறான். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், யதார்த்தத்தை நம்புவதா? இதுவரை நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதா? அல்லது கடவுள் கொடுத்த இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வைப்பதா? என்கிற குழப்பம், செதேக்கிய அரசனுக்கு ஏற்படுகிறது. இறுதியில், தன்னுடைய நம்பிக்கையை அவன், யாவே இறைவன் மீது வைக்கிறான்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில், நாம் சந்திக்கிற பிரச்சனைகள் ஏராளம். பிரச்சனைகளை எதிர்கொள்கிறபோது, நமக்குள்ளாக பலவிதமான குழப்ப மனநிலைகள் ஏற்படுகின்றன. அதில் தெளிவான முடிவெடுப்பது அவசியமாகிறது. நாம் எடுக்கிற முடிவுகள் சரியானதாகவும் இருக்க வேண்டும். இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைப்பது ஒன்று தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்