இறைவன் நம்மீது காட்டும் அன்பு
ஓசேயா 11: 1, 3 – 4, 8 – 9
முற்காலத்தில் பாரசீகம் மற்றும் கிரேக்க நாடுகள் அவ்வப்போது, கடுமையான போர்களில், ஒருவருக்கு எதிராக ஈடுபட்டனர். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், கிரேக்க வீரர்களே எப்போதும் வெற்றி பெற்றனர். இதுஎப்படி சாத்தியம்? பாரசீக வீரர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைகள். அந்த போரில் ஈடுபடும்படி கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். வேறு வழியில்லாமல் அந்த போரில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், கிரேக்க வீரர்களோ தங்கள் நாட்டிற்காக, தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுகிறோம் என்கிற, உணர்வோடு போரிட்டனர். எனவே தான், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் வெற்றி பெற்றனர். தங்கள் தாய்நாட்டின் மீது கொண்டிருந்த பாசம், அந்த போரில் எப்படியும் வெற்றி பெற்று தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தியது.
இந்த உவமையை நாம் இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இடையேயான உறவிற்கு பொருத்திப் பார்க்கலாம். கடவுள் தன்னை இஸ்ரயேல் மக்களோடு அன்புறவில் இணைத்திருக்கிறார். இஸ்ரயேல் குழந்தையாக இருந்தபோதே, இறைவன் அவர்களை அன்பு செய்தார். குழந்தையாக என்று சொல்வது, இஸ்ரயேல் மக்களின் தொடக்கநிலையைக் குறிக்கிறது. நாடில்லாமல், நாடோடிகளாய் வாழ்ந்த அந்த நிலைதான் இஸ்ரயேல் மக்களின் தொடக்கநிலை. அந்த குழந்தையை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுத்து, நடைபயிற்றுவித்தது கடவுள். அவர்கள் காயம்பட்டபோதெல்லாம், மருந்திட்டு குணப்படுத்தியது இறைவன். ஆனாலும், இஸ்ரயேல் மக்கள் கடவுளை உதறித்தள்ளிவிட்டார்களே என்று, அவர்கள் மீது கடவுள் வேதனைப்படுவதை இறைவாக்கினர் இங்கே படம்பிடித்துக் காட்டுகிறார். இஸ்ரயேல் கடவுளின் செல்லக்குழந்தை என்பதால், தவறு செய்தாலும் தன்னுடைய கோபத்தைக் காட்ட மாட்டேன் என்று, ஆண்டவர் கூறுகிறார்.
இறைவனின் அதிகப்படியான அன்பை வெளிப்படுத்தும் பகுதியாக இது இருப்பதை நாம் பார்க்கிறோம். தவறுகளை மன்னிக்கின்ற தாராள குணத்தை நாம் பார்க்கிறோம். இறைவனுடைய இரக்கம் நமக்கு எப்போதும் இருக்கிறது என்பதை, இறைவாக்கினர் நம்முடைய வாழ்வின் செய்தியாக தருகிறார். இறைவனைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. தாயின் அன்பை உணர்ந்திருக்கிற குழந்தை தாயைப் பார்த்து பயப்பட தேவையில்லை. அதேபோல, இறைவனின் அன்பை உணர்ந்திருக்கிற நாம், கடவுளைப் பார்த்து பயப்படத்தேவையில்லை.
இயேசுவின் திரு இருதயப்பெருவிழா
இயேசுவின் திரு உடல், திரு இரத்தப்பெருவிழாவிற்குப் பிறகு வரக்கூடிய வெள்ளிக்கிழமையில், இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இதயம் என்பது அன்பின் அடையாளம். கடவுள் நம் அனைவர் மேலும் கொண்டிருக்கக்கூடிய அன்பின் அடையாளம் தான் இயேசுவின் திரு இதயம். அந்த அன்பு இயேசுவின் பாஸ்கா மறைநிகழ்ச்சியில் வெளிப்பட்டதை, இந்த திருவிழா நமக்குக்கூறுகிறது. சிலுவையில் குத்தித்திறக்கப்பட்ட திருவிலாக்காயத்தையும், அவரது பாடுகளையும் குறிக்கும் வண்ணம், திருஇதயத்தில் ஒரு காயமும், அதற்கு சற்றுமேலே முள்முடியும், அதன்மேல் திருச்சிலுவையும் காணப்படுகிறது. திரு இதயத்தின் மேல் பற்றியெரியும் தீச்சுடர், இயேசுகிறிஸ்து நம்மேல் கொண்டிருக்கிற அதிகமான அன்பைக்குறிப்பதாகும்.
திரு இதய ஆண்டவர் பக்திமுயற்சி 13 மற்றும் 14 நூற்றாண்டுகளில் பரவத்தொடங்கியது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரே-லி-மோனியால் என்ற இடத்தில் வாழ்ந்த விசிட்டேஷன் துறவற சபையைச்சேர்ந்த அருட்சகோதரி மார்கரெட் மேரி என்பவர் 1673 முதல் 1675 வரை கண்ட, பல தெய்வீக காட்சிகளாகும். இந்தக்காட்சிகளில் ஆண்டவர் இயேசு, திரு இருதய விழாவை, திருவுடல் திரு இரத்தப்பெருவிழாவிற்குப் பிறகு உள்ள வெள்ளிக்கிழமையில் அறிமுகப்படுத்த, காட்சியில் சொன்னார். திருத்தந்தை 13 ம் கிளமெண்ட் இதை 1765 ல் அங்கீகரித்தார். 1865 ல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவ்விழாவினை கட்டாய விழாவாக திருச்சபை முழுவதும் அறிமுகப்படுத்தினார்.
இறைவனுடைய அன்பை நாம் முழுவதுமாக உணர வேண்டும் என்பதுதான் இந்த விழா நமக்கு உணர்த்தும் செய்தியாகும். இயேசுவின் அன்பு நிறைவான அன்பு. நம்மேல் அதிகமான இரக்கம் காட்டுகிற அன்பு. இயேசுவின் திரு இதயத்திடம் நம்மையே கையளிப்போம். மகிழ்வோடு வாழ்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்