இறைவன் தன் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்
திருப்பாடல் 85: 8, 10 – 11, 12 – 13
இறைவன் தன்னுடைய மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிப்பதாக ஆசிரியர் கூறுகிறார். நிறைவாழ்வு என்பது என்ன? நிறைவாழ்வை இறைவன் வாக்களிக்கக்கூடிய அளவிற்கு அது சிறந்ததா? நிறைவாழ்வு என்பது நிறைவான வாழ்வைக் குறிக்கக்கூடிய அர்த்தம். இந்த நிறைவான வாழ்வு எதிலிருந்து கிடைக்கிறது? நிறைவாழ்வு என்பது ஒரு பொருளல்ல. அது ஒரு நிலை. ஆன்மாவின் மகிழ்வு தான் நிறைவாழ்வு. இந்த ஆன்மாவின் மகிழ்வு வெறும் பொருளைச் சேர்ப்பதிலோ, அதிகாரத்தைப் பெறுவதிலோ இல்லை. மாறாக, அதனையும் கடந்த மதிப்பீடுகளிலும், விழுமியங்களிலும் காணப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
இன்றைக்கு பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆவல் கொண்டிருக்கிறோம். அந்த பணம் நிறைவைத்தரும், நிறைவாழ்வைத் தரும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறோம். ஆனால், பணத்தை முழுவதுமாக சேர்த்து வைத்த பின்னர், அந்த நிறைவைப்பெற்ற உணர்வு இல்லை. அப்போதுதான், நிறைவு என்பது பணத்திலிருந்தோ, பொருளிலிருந்தோ கிடைக்கக்கூடியது அல்ல என்பதை உணர ஆரம்பிக்கிறோம். ஆக, நிறைவை ஆண்டவர் மட்டும் தான் கொடுக்க முடியும். அதாவது, ஆண்டவர் சொல்கிறபடி, நம்முடைய வாழ்வை அமைத்துக்கொண்டால் தான் நிறைவைப் பெற முடியும். அந்த நிறைவை கடவுள் மீது பற்று கொண்டவர்க்கு கடவுள் தருகிறார். கடவுள் பொருட்டு, இந்த உலக செல்வங்களின் மீது ஆர்வம் காட்டாமல்,கடவுளைப் பற்றிக்கொள்கிறவர்கள் இந்த நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்கின்றனர்.
நம்முடைய வாழ்வில் நாம் அனைவருமே நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். அந்த நிறைவாழ்வை நாம் இறைவனில் பெற, இறைவார்த்தைக்கு செவிமடுப்போம். அதற்கேற்ப நம்முடைய வாழ்வை நாம் வாழ ஆரம்பிப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்