இறைவன் காட்டும் பேரன்பு
எசாயா 49: 1 – 6
இறைவன் காட்டும் பேரன்பு
கடவுளுடைய மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இறைவனுடைய ஆலயம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு தகர்க்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய சொந்தநாட்டிலிருந்து, அவர்களுடைய கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய விசுவாசத்தை சோதிப்பதாக இருக்கிறது. விசுவாசத் தளர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது. இன்னும் தாங்கள் கடவுளின் பிள்ளைகள் தானா? தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் தானா? கடவுள் தங்களை இன்னும் அன்பு செய்கிறாரா? இந்த அந்நிய தேசத்தில் நம் இறைவனைக் காண முடியுமா? அவரை வணங்க முடியுமா? என்கிற பல்வேறு கேள்விகள் அவர்களுடைய உள்ளத்தில் தோன்றி மறைகிறது.
இந்த பகுதியில் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைகிறது. கடவுள் தன்னுடைய மீட்பரை அனுப்புவார் என்றும், அவர் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, நீதியை நிலைநாட்டுவார் என்றும் வாக்குறுதியை வழங்குகிறார். எசாயா 40 ம் அதிகாரம் முதல் 55 ம் அதிகாரம் வரை உள்ளவை, இரண்டாம் புத்தகமாகச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டாம் புத்தகத்தில், இஸ்ரயேல் மக்கள் கண்டிப்பாக தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்வார்கள் என்றும், இழந்துபோயிருக்கிற தங்களது நாட்டையும், ஆலயத்தையும் கட்டியெழுப்புவார்கள் என்றும், அவர்களுக்கு நம்பிக்கைச் செய்தி வழங்கப்படுகிறது. மீண்டும் மக்கள் இஸ்ரயேலின் உண்மையான கடவுளிடத்தில் தங்களை ஒப்படைத்து, அவரது குரலுக்குச் செவிமடுக்க வேண்டும் என்கிற விண்ணப்பமும் இங்கு வைக்கப்படுகிறது.
இறைவன் எப்போதும் நம்மை கைவிடுகிறவர் கிடையாது. அவர் எப்போதும் நம் அருகிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறவராக இருக்கிறார். அவருடைய உள்ளம் இரக்கம் நிறைந்தது. அவரது அன்பு என்றென்றைக்கும் நமக்கு உண்டு. நாம் எப்படிப்பட்ட நிலையிலிருந்தாலும், நம்மைத் தாங்குவதற்கு, நம்மைத் தேற்றுவதற்கு வருகிற உண்மையான இறைவன். அவரிடத்தில் நம்மையே முழுமையாக ஒப்படைப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்