இறைவன் காட்டும் அன்பு
எசேக்கியேல் 12: 1 – 12
இறைவன் காட்டும் அன்பு
எசேக்கியேல் இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்படுகிறது. அவரை ஓர் அடையாளமாக மக்கள் மத்தியில் இருக்கச் சொல்கிறார். என்ன அடையாளம்? நாடு கடத்தப்படுவோரின் நிலையை அவர்கள் முன் செய்து காட்டச் சொல்கிறார். எதற்காக? இறைவாக்கினர் வழியாக அவர்களிம் சொன்ன வார்த்தைகள் எடுபடவில்லை. அவர்கள் செவிகொடுத்து கேட்கவில்லை. ஒருவேளை, நடக்கப்போகிற காட்சி அவர்கள் கண்முன் பார்த்தாலாவது, அவர்கள் மனம் மாறி, தன்னிடம் வந்து விட மாட்டார்களா? என்கிற ஏக்கம் தான், கடவுளின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
தீயவர்கள் அழிந்துபோக வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் விரும்பியது கிடையாது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் ஆசை. அதற்காக, தவறு செய்கிறவர்களை கடவுள் பொறுத்துக் கொள்கிறவர் கிடையாது. அவர்கள் தங்கள் தவறான வழிகளிலிருந்து திருந்தி வருவதற்கு, மீண்டும் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருகிறார். ஒருமுறை அல்ல, பலமுறை முயற்சி செய்கிறார். தன்னுடைய வார்த்தையின் வழியாக தவறான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களுக்கு அறிவிப்பு செய்கிறார். அதற்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை என்றால், காட்சிகள் வழியாக வெளிப்படுத்துகிறார். இப்படியாக, அவர்கள் எப்படியாவது திருந்தி, வரப்போகிற தண்டனையிலிருந்து திருந்தி வர வேண்டும் என்று விரும்புகிறார். ஆனாலும், மக்கள் திருந்துவதற்கு முன்வராதது கடவுளை வேதனைப்படுத்துகிறது.
இறைவன் மக்கள் மீது எப்படியெல்லாம் அன்பு வைத்திருக்கிறார் என்பதை, இந்த பகுதி நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கடவுள் எப்போதும் மனிதர்கள் அழிந்து போக வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது .மாறாக, அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும், இறைவன் தருகின்ற எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்று வாழ வேண்டும் என்றே விரும்புகிறார். இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் இந்த ஆசைகளை நாம் நிறைவேற்றி, மகிழ்ச்சியா வாழ முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்