இறைவனைத் தேடும் உள்ளம்
திருத்தூதர் பணி 8: 26 – 40
பிலிப்பு தூய ஆவியாரால் வழிநடத்தப்படுகிறார். எங்கேயெல்லாம் தூய ஆவி அவரை அழைத்துச் செல்கிறாரோ, அங்கெல்லாம், அவர் மறுக்காமல் செல்கிறார். அப்படி செல்கிற வழியில், இறைவார்த்தையின் மீது தாகம் கொண்டிருக்கிற ஓர் அரச அலுவலரைப் பார்க்கிறார். அவர் தான் எத்தியோப்பிய நிதியமைச்சர். அவர் எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தெளிவாக ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் கூட, ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கிறார். தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்ட பிலிப்பு அவருக்கு விளக்கம் கொடுக்கிறார்.
இந்த பகுதி, இறைவார்த்தையின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இறைவன் எப்படியெல்லாம் உடனிருந்து கற்றுக்கொடுக்கிறார் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. எத்தியோப்பிய அமைச்சருக்கும், பிலிப்புவிற்கும் பழக்கம் கிடையாது. இருவரும் வேறு வேறு இடங்களில் இருக்கிறவர்கள். ஆனால், இருவரும் ஒன்றிணைகிறார்கள். அது இயல்பாகவே அமைந்த நிகழ்ச்சி அல்ல. மாறாக, இறைவனால் உருவாக்கப்பட்ட திட்டம். எப்போது நாம் இறைவனை நோக்கிச் செல்ல வேண்டும், இறைவனை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போது, இறைவன் நமக்கு உதவி செய்வார் என்பதை, வெளிப்படுத்துகிற அற்புதமான பகுதியாக இது அமைகிறது. நாம் இறைவனைப் பற்றி அறிய வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டிருந்தால் போதும். இறைவன் சிறப்பாக தன்னை வெளிப்படுத்துவார்.
இறைவனை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்கிற ஆர்வம் நமக்கு இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். இன்றைக்கு இறைவனை அதிகமாக அறிவிக்க வேண்டும், இறைவார்த்தையைக் கேட்க வேண்டும் என்கிற எண்ணம், பிரிவினை சபையினரிடையே அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடத்தில் ஆடம்பரமும், தேவையற்ற சடங்குகளும் பெருகிக் கொண்டிருக்கிறதே தவிர, ஆண்டவரைப் பற்றி அறிய வேண்டும் என்கிற எண்ணம், குறைந்து கொண்டே இருக்கிறது. இறைவனை இன்னும் அதிகமாக நாடுகிறவர்களாக மாற, நாம் முயற்சி எடுப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்