இறைவனே எப்போதும் உயர்ந்தவர்
2சாமுவேல் 7: 1 – 5, 8 – 12, 16
கடவுளை விடவும் மேலானவர்களாக ஒரு சில தருணங்களில் நம்மையே நாம் நினைத்துக் கொள்கிறோம். கடவுளை விட அதிகம் சிந்திப்பவர்களாகவும், அறிவாளிகளாகவும் நினைத்துக் கொள்கிறோம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகம். தாவீது ஆண்டவர்க்கு ஓர் இல்லம் கட்ட வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை இறைவாக்கினர் நாத்தானிடம் வெளிப்படுத்துகிறார். இது ஓர் அருமையான சிந்தனை என்று, இறைவாக்கினரும், ஆண்டவருடைய திருவுளம் எது? என்பதை அறிய நினைக்காமல், அவர் என்ன நினைக்கிறாரோ, அதை பதிலாக தருகிறார். தாவீதை உற்சாகப்படுத்துகிறார். ஆனால், அன்றிரவே ஆண்டவருடைய வார்த்தை நாத்தானுக்கு அருளப்படுகிறது.
தாவீது அவருடைய நிலையை அறிந்து கொள்வதற்காக, அவருடைய தொடக்கநிலையிலிருந்து கடவுள் பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறார். சாதாரண ஆடு மேய்க்கிற சிறுவனாக இருந்த அவரை, கடவுள் யாரும் நினையாத அளவுக்கு உயர்த்தினார். அந்த உயர்ந்த நிலைக்குச் சென்றவுடன், தன் பழைய நிலையை தாவீது மறந்தார். பல்வேறு தவறுகளைச் செய்தார். கொலையும் செய்தார். அவருடைய தவறு மன்னிக்கப்பட்டாலும், இறைவனுடைய ஆசீர்வாதம் தொடர்ந்து அவருக்கு இருந்தாலும், ஒரு சிலவற்றை அவர் இழந்துதான் ஆக வேண்டும் என்கிற, நீதியை கடவுள் வெளிப்படுத்துகிறார். கறைபடிந்த கையோடு ஆண்டவருடைய ஆலயத்தைக் கட்ட அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
நம்முடைய வாழ்வில், நாம் இருந்த பழைய தருணங்களை எப்போதும் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, தாழ்நிலையில் நாம் இருந்தபோது, நாம் சந்தித்த அனுபவங்கள், நம்முடைய நிலை, எப்போதும் நம் நினைவில் இருக்க வேண்டும். அது நம்முடைய எதிர்காலத்தை செதுக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது நமக்கு கர்வமோ, அகங்காரமோ நிச்சயம் ஏற்படாது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்