இறைவனுடைய திருவுளம்
திருத்தூதர் பணி 16: 1 – 10
இறைவன் நம்மை வழிநடத்துகிறார். தன்னுடைய வழிநடத்துதலை அவர் எப்படி மானிடர்க்கு வெளிப்படுத்துகிறார்? இன்றைய வாசகம் நமக்கு அருமையான ஒரு எடுத்துக்காட்டை தருகிறது. பவுல் கனவு காண்கிறார். அவருடைய கனவில், மாசிதோனியர் ஒருவர், அவர்களுக்கு வந்து உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறார். அந்த கனவை இறைத்திருவுளமாக ஏற்று, பவுலடியார் அங்கு செல்வதற்கு ஆயத்தமாகிறார். கடவுளின் திருவுளத்திற்காக உண்மையான உள்ளத்தோடு ஏங்குகிறபோது, இறைவன் நமக்கு நிச்சயம் வெளிப்படுத்துவார் என்கிற பவுலடியாரின் நம்பிக்கை இந்த பகுதியில் உறுதிப்படுத்தப்படுகிறது.
விவிலியத்தில் கடவுள் தன்னை நோக்கி மன்றாடுகிற தன்னுடைய பிளள்ளைகளுக்கு பலவிதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். மோசேக்கு நெருப்புப்புதரில் தன்னை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் வழியாக வெளிப்படுத்தினார். யோசேப்புக்கு கனவின் வழியில் இறைத்திருவுளத்தை வெளிப்படுத்தினார். இப்படி உதாரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரிடத்திலும் ஒற்றுமை இருப்பதையும் நாம் பார்க்கலாம். இவர்கள் அனைவருமே, கடவுளுடைய திருவுளத்தை அறிவதற்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்கள். அந்த ஏக்கம் தான், இறைவனுடைய திருவுளத்தை அறிவதற்கு அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்தது.
நம்முடைய வாழ்வில் இறைவனுடைய திருவுளத்தை அறிய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் போதும். அந்த எண்ணம் இறைவனுடைய திருவுளத்தை அறிவதற்கு நமக்கு நிச்சயம் உதவி செய்யும். நம்முடைய எண்ணங்களை ஊடுருவிப்பார்க்கிற இறைவன், நிச்சயம நமக்கு தன்னுடைய திட்டத்தை வெளிப்படுத்துவார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்