இறைவனுக்குப் பிரமாணிக்கமாய் இருப்போம்
இயேசுவின் காலத்திலே பாலஸ்தீனம் உரோமையர்களுக்கு அடிமை நாடாக இருந்தது. ஒவ்வொரு யூதக்குடிமகனும் மூன்று வகையான வரிகளைச்செலுத்த வேண்டியிருந்தது. முதலில் நிலவரி (Ground Tax). நிலத்திலிருந்து பெறப்படும் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு உரோமையர்களுக்கு வரியாக செலுத்த வேண்டியிருந்தது. இரண்டாவது வருமான வரி(Income Tax). வருமானத்தில் ஒரு சதம் உரோமையர்களுக்கு செலுத்த வேண்டிய வரி. மூன்றாவது, ஆள் வரி (Poll Tax). 14 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆண்மகனுக்கும், 12 வயது முதல் 65 வயது வரை உள்ள பெண்களும் ஒரு தெனாரியம் வரியாக செலுத்த வேண்டும். இங்கே நற்செய்தியில் விவாதிக்கப்படுவது ஆள்வரி(Poll Tax).
வரி செலுத்துவதில் என்ன குற்றம் காண முடியும்? அல்லது என்ன விவாதம் இருக்க முடியும்? என்று கேட்கலாம். யூதர்களைப்பொறுத்தவரையில் அவர்கள் அரசராக ஏற்றுக்கொள்வது கடவுளை மட்டும்தான். வேறு யாரையும் அரசராக ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் உரோமையர்களுக்கு அடிமை நிலையில் இருப்பதால், வேறு வழியில்லாமல் ஒரு சிலவற்றை ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும், உள்ளத்தில் அவர்கள் கடவுளைத்தவிர வேறு எவரையும் அரசராக ஏற்றுக்கொள்வதில்லை. வரி செலுத்துவது என்பது ஒருவரை அவருடைய நிலையில் ஏற்றுக்கொள்வதற்கு சமம். இங்கே ஆள்வரியை செலுத்தினால், உரோமை அரசரை அரசராக ஏற்றுக்கொண்டதற்கு சமம். வரி செலுத்தலாம் என்றால், மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரி செலுத்தக்கூடாது என்றால், உரோமையர்களிடம் இயேசுவைக் குற்றப்படுத்தலாம். ஆனால், இயேசுவின் பதில் அவர்களை வியக்க வைக்கிறது.
நாம் எப்போதுமே கடவுளுக்கு உரியவர்கள் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனது அன்புப்பிள்ளைகளாக தேர்ந்தெடுத்து இருக்கிறார். நம் ஒவ்வொருவரையும் கண்ணின் மணி போல காத்து வருகிறார். நம்மை தந்தையாக இருந்து காத்துவரும் நம் ஆண்டவர்க்கு பிரமாணிக்கமாய் இருக்கும் அருள் வேண்டுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்