இறைவனின் வருத்தம்
இந்த உலகத்தில் கடவுள் நம்மைப் படைத்தார் என்றால், அதற்கு முழுமையான நோக்கம், நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான். இந்த உலகத்தின் படைப்புக்களில் எல்லாம் சிறந்த படைப்பாக, மனிதர்களைப் படைத்தார். அவர்களை படைப்பின் சிகரமாக உண்டாக்கினார். அவர்களுக்கு பல சுதந்திரங்களையும் கொடுத்தார். இவ்வளவு செய்தாலும், மனித இனம் தன்னைப் படைத்தவரை நன்றியோடு நினைத்துப்பார்க்கவில்லை. இன்றைய நற்செய்தியின் வெளிப்பாடு, கடவுளின் கோபம் என்பதை விட, கடவுளின் மனவருத்தம் என்பதே யதார்த்தமான நிலையாக இருக்கிறது.
மனிதன் மகிழ்ச்சியாக வாழத் தேவையான அனைத்தையும் கடவுள் கொடுத்திருக்கிறார். ஆனால், மனித இனம் மகிழ்ச்சியாக இல்லை. காரணம், சுயநலம். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல், தான் மட்டும் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற குறுகிய மனம் தான், மனிதனின் மகிழ்ச்சியற்ற நிலைக்கு காரணமாக இருக்கிறது. தான் மகிழ்ச்சியாக இல்லையென்றாலும் பரவாயில்லை. மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடக்கூடாது என்கிற எண்ணம், இன்றைய நாகரீக மனிதனின் நெஞ்சத்தில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். அனைவரையும் சகோதர, சகோதரிகளாக பேணக்கூடிய மனநிலை பிறக்க வேண்டும். அதற்கான அழைப்பு தான், இயேசுவின் நற்செய்தி.
இயேசுவின் வார்த்தைகளை வெறுமனே, யாருக்கோ என்றில்லாமல், அனைவருக்கும் இது பொருந்தும் என்கிற மனப்பான்மையை நம்மில் வளர்த்தெடுக்க முயல்வோம். நாம் மட்டுமல்ல, அந்த எண்ணத்தை நமது வருங்கால சந்ததியினரின் உள்ளத்திலும் பதிக்க, நம்மால் இயன்ற முயற்சியை எடுப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்