இறைவனின் வருகையும் நமது வாழ்வும்
திருவருகைக்காலத்தின் முதல் வாரத்தில் இருக்கிறோம். கடந்த வழிபாட்டு ஆண்டை நேற்றோடு நிறைவு செய்திருக்கிறோம். புதிய ஆண்டை இன்றோடு தொடங்குகிறோம். ஏறக்குறைய நமது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்தது இது. கடந்த ஆண்டு முழுவதும் இயேசுவின் பிறப்பு, போதனை, நமக்காக இறந்து உயிர்த்து, விண்ணகம் சென்று, அனைத்துலக அரசராக அவரை நிலைநிறுத்திக்கொண்டதை தியானித்து நம்மையே புதுப்பித்துக்கொண்டிருக்கிறோம். மற்றொரு புதுப்பித்தலுக்கான தொடக்கம் தான் இன்றைய திருவருகைக்காலத்தின் முதல் வாரம்.
இந்த நாளிலே நாம் அனைவரும் சிந்திப்பது புதிய ஆண்டிற்கான தயாரிப்பு மட்டுமல்ல. பழைய ஆண்டு எந்தளவுக்கு நம்மைப் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வதும் தான். இயேசுவின் வாழ்வு முழுவதையும் அறிந்து தியானித்திருக்கிற நாம், எப்படி அவரது வாழ்வை நமது வாழ்வாக மாற்றியிருக்கிறோம்? அல்லது மாற்ற முயற்சி எடுத்திருக்கிறோம்? அதிலே எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம்? அல்லது சறுக்கியிருக்கிறோம்? இந்த கேள்விகளை நாம் மீண்டும், மீண்டுமாகக் கேட்டுப்பார்த்து, அதற்கான பதில்களையும் நாம் காண முயல வேண்டும். நமது வார்த்தைகள், உரையாடல்கள், செயல்பாடுகள் முதிர்ச்சி பெற்றிருக்கிறதா? என்று நம்மையே நாம் கேட்டுப் பார்ப்போம்.
கடந்த ஆண்டு நம்மை எந்தளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதை சிந்திக்கிற நாம், இனி வரக்கூடிய நாட்களிலும் கடவுளுக்கு ஏற்ற மனநிலையோடு வாழ ஆண்டவரிடம் வரம் வேண்டும். அவரது அன்பும், இரக்கமும் நம்மோடு இருக்கிறவரை, நாம் எந்நாளும் சரியான பாதையில் தான், வலம் வருவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்