இறைவனின் மீட்புத்திட்டம்
எசாயா 53: 10 – 11
மீட்பரைப் பற்றிய செய்தி, இன்றைய வாசகத்தில் நமக்கு அருளப்படுகிறது. இறைவன் இஸ்ரயேல் மக்களை மீட்பதற்காக, விரைவில் ஒரு மீட்பரை அனுப்புவதாக இறைவாக்கினர்கள் வழியாக மக்களுக்கு அறிவிக்கிறார். அந்த மீட்பர் எப்படிப்பட்டவராக இருப்பார்? எப்படி மக்களின் பாவங்களைப் போக்குவார் என்பது, வெளிப்படைச்செய்தியாக, இறைவாக்கினர் எசாயாவால் அறிவிக்கப்படுகிறது. பொதுவாக, கடவுள் இந்த உலகத்திலிருக்கிற பாவங்களை அழிக்க வேண்டுமென்றால், அவதாரம் எடுத்து, தன்னுடைய வல்லமையால் அழித்தொழிப்பார். இதுதான் பல்வேறு மதங்களில் காணப்படுகிற செய்தி.
ஆனால், யாவே இறைவன், புதுமையான செய்தியை இறைவாக்கினர் வழியாக சொல்கிறார். அந்த செய்தி என்ன? இஸ்ரயேல் மக்களை மீட்பதற்காக அனுப்பப்படுகிறவர், தன்னுடைய துன்பத்தின் வழியாக, மக்களை விடுவிக்க இருக்கிறார் என்பதாகும். இது கேட்பதற்கு சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. ஒருவேளை நகைப்பாகக்கூட இருக்கலாம். ஆனால், இதுதான் கடவுள் தேர்ந்து கொண்ட வழியாக இருக்கிறது. மக்களின் பாவங்களைப் போக்குவதற்காக, தன்னையே பழியாகவும், வரவிருக்கிற மீட்பர் தரவிருக்கிறார். அவருடைய பாடுகள், அவர் படக்கூடிய துன்பங்கள் இந்த உலகத்தின் மீட்பிற்கு வழிவகுக்கும் என்பது தான், சொல்லப்படுகிற செய்தியாகும்.
நம்முடைய வாழ்வில் நாம் துன்பப்படுகிறபோது, அந்த துன்பத்தைக் கண்டு, மனம் வெகுண்டுவிடாமல், இறைவனையோ, மற்றவர்களையோ பழித்துரைக்காமல், அந்த துன்பத்திற்கான காரணங்களை அறிய தேவையில்லாமல் முற்படாமல், நாம் அனுபவிக்கிற துன்பங்களை, ஆன்மாக்களை மீட்கும், மீட்புப்பணிக்குச் செலவிட, முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்