இறைவனின் பிரசன்னம், மகிழ்ச்சியின் தருணம்
யூதச்சட்டப்படி ஆண்டிற்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்படும் பாவக்கழுவாய் போக்கும் நாளன்று அனைவரும் கட்டாயம் நோன்பிருக்க வேண்டும். இது தவிர, சில பழமைவாத யூதர்கள் வாரத்திற்கு இருமுறை நோன்பிருந்தனர்(திங்கள் மற்றும் வியாழன், காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை). திருமணத்தைப்பொறுத்தவரையில் யூதர்களுக்கு திருமணம் முடிந்தாலும் ஒரு வாரமோ அல்லது இன்னும் அதிக நாட்களோ தொடர்ச்சியாக விருந்து நடைபெறும். விருந்தினர்களுக்காக திருமண வீடு எப்போதும் திறந்தே இருக்கும். திருமண விருந்து மகிழ்ச்சியான விருந்து. எனவே, திருமண விருந்தில் பங்குபெறும் விருந்தினர்களுக்கு, வாரம் இருமுறை நோன்பு இருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படாதவாறு இந்த விலக்கு அவர்களுக்குத் தரப்பட்டிருந்தது.
இதைத்தான் இயேசு இங்கே சுட்டிக்காட்டுகிறார். “மணமகன் தங்களோடு இருக்கும் வரை நோன்பிருக்க முடியுமா?” மாற்கு 2: 19. இயேசு கிறிஸ்து நோன்பு இருப்பதை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஏனென்றால், இயேசுவே தன்னுடைய பணிவாழ்வின் தொடக்கத்தில் 40 நாட்கள் பாலைவனத்தில் நோன்பிருந்தார். மாறாக, இயேசு வழியாக கடவுள் அவர்கள் மத்தியில் இருக்கிறபோது, மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்ற செய்தியைத்தருகிறார். நம் ஒவ்வொருவருக்கும் இயேசுகிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணம் மகிழ்ச்சியைத்தர வேண்டும். ‘இதோ! உலகம் முடியும் மட்டும் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்று மொழிந்த நம் அன்பு ஆண்டவர், தன்னுடைய வாக்குறுதிக்கு ஏற்ப இன்றளவும் நம்மோடு இருக்கிறார்.
வாழ்வில் துன்பங்கள், துயரங்கள் நம்மை வாட்டும்போது, நம்பிக்கையிழந்து வாடும்போது இயேசுவின் இந்த மொழிகள் நமக்கு ஆறுதலைத்தர வேண்டும். இயேசுவின் இருப்பை நம்வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உணர்வோம். மகிழ்ச்சியோடு வாழ்வோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்