இறைவனின் பணிக்காக நம்மையே கொடுப்போம்
திருத்தூதர் பணி 13: 13 – 25
உயிர்த்த கிறிஸ்துவின் அடையாளமாக பவுல் விளங்குவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். இயேசு யார்? இயேசுவுக்கும் யூதர்கள் வழிபடக்கூடிய “யாவே“ இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? இயேசு மீது எதற்காக நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்? என்று, மீட்பின் வரலாற்றை, தான் பெற்ற அறிவாற்றலைக் கொண்டு விளக்குகிறார். வரலாறு என்பது முக்கியமானது. நம்மைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, நம்முடைய வரலாற்றைப் படிக்க வேண்டும். அது ஓர் இனமாக இருக்கலாம் அல்லது தனி மனிதனாக இருக்கலாம்.
இயேசுவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, அதிலும் சிறப்பாக அவரை நம்பி ஏற்றுக் கொள்வதற்கு, அவருடைய வரலாற்றை அறிந்து கொள்வது முக்கியமானது. யூதர்கள் அனைவருமே தங்களது மறையை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். எனவே தான், பவுல் அவர்களுக்கு மீட்பின் வரலாற்றைப் பற்றி சொன்னபோது, அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கிறிஸ்துவின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் மீது நம்பிக்கை வைக்க முடிந்தது. இங்கே, நாம் அற்புதமான செய்தியை அறிந்து கொள்ள முடியும். பவுல் சிறந்த அறிவாளி. தான் கற்றுக்கொண்டதை, அருமையாக கிறிஸ்துவின் பணிக்காக பயன்படுத்துகிறார். அவர் சொல்கிற வரலாறும், அவருடைய வாதங்களும் கேட்பவர் கவர்ந்திழுக்கச் செய்கிறது. உண்மை என்று நம்ப வைக்கிறது. இறைவன் அவருக்கு கொடுத்திருக்கிற கொடைகளை சரியான விதத்தில் பயன்படுத்தி, நற்செய்திப் பணியைச் செய்கிறார்.
நம்முடைய வாழ்விலும், கடவுள் பலவிதமான கொடைகளைக் கொடுத்திருக்கலாம். இறைவன் நமக்கு தந்திருக்கிற கொடைகளை, மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையில், நாம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஆகும். அந்த பணியை பவுல் மிகச்சிறப்பாக செய்தார். நம்முடைய வாழ்விலும், அதே பணியை அகமகிழ்வோடு செய்வதற்கு முனைவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்