இறைவனின் நீதி !
நீதி என்பது என்ன? ஒருவருக்குரியதை அவருக்கு வழங்குவதுதான் நீதி. இந்த நீதியும் மனிதரின் பார்வையில் ஒன்றாகவும், இறைவனின் பார்வையில் வேறொன்றாகவும் இருப்பதை இன்றைய உவமை சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், மனித நீதியை விட்டு விலகி, இறைநீதியின் பக்கம் நம் நடைபோடவும் அறைகூவல் விடுக்கிறது. மனித நீதியின்படி முதலில் பணியில் சேர்ந்து, அதிக நேரம் உழைத்தவர்களுக்கு அதிக ஊதியம் கிடைத்திருக்க வேண்டும். தாமதமாக வந்து, குறைந்த நேரம் உழைத்தவர்கள் குறைவாகப் பெற்றிருக்க வேண்டும். இதுதான் சரி. அப்போதுதான் அனைவரும் நேர்மையாக உழைப்பர்.
ஆனால், இறைவனின் பார்வை அப்படி இல்லை. அது பரிவின் பார்வையாக, பாசத்தின் பார்வையாக இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால், சில வேளைகளில் மனித, சமூக காரணங்களால் எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்புகளும், திறமைகளும் அமைந்துவிடுவதில்லை. ஒரு சிலர் பிறரைவிட பிற்பட்டவர்களாக, அல்லது பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்துவிடுகின்றனர். அவர்கள்மீது சிறப்பான ஒரு பரிவைப் பொழிந்து அவர்களுக்கும் அதிக ஆற்றலும், வாய்ப்புகளும் கிடைத்தவர்களுக்கு இணையான ஊதியத்தை தலைவர் வழங்குகிறார். இதுதான் இறை நீதி.
இட ஒதுக்கீடு என்பதுவும் இறைநீதியின் ஒரு பார்வைதான். யாருக்கு எது உரியதோ, அதை அவர்களுக்குச் சேர்த்துக்கொடுப்பதுதானே இட ஒதுக்கீடு. நமது மனித பார்வையில் நீதியைப் பாராமல், இறைவனின் பார்வையில் நீதியை, மனிதர்களைக் காணக் கற்றுக்கொள்வோம்.
மன்றாடுவோம்: நீதியின் தலைவரே இறைவா, உமது பரிவின் பார்வைக்காக உம்மைப் போற்றுகிறேன். எந்த ஒரு மனிதரையும், நிகழ்வையும், மனிதப் பார்வையில் பாராமல், உமது நீதியின் பார்வையில், பரிவின் பார்வையில் பார்க்கவும், பிறரது ஆசீர்வாதங்களைக் கண்டு பொறாமைப்படாமல், உமது வள்ளன்மையைப் போற்றவும் எனக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருட்தந்தை குமார்ராஜா