இறைவனின் திருவுளம்
திருத்தூதர் பணிகள் 16: 22 – 34
கடவுளுடைய வழிகள் அற்புதமானவை. நாம் நம்ப முடியாதவை. பல நேரங்களில், நம்முடைய மனித பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால், காலம் கனிகிறபோது, நாம் கடவுளின் அன்பை உணர்ந்து மிகவும் வியப்படைகிறோம். கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருநாளும், நம்முடைய வாழ்வில் நடக்கிற நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து, ஏன்? ஏன்? என்று, பல ”ஏன்”களை கடவுளிடம் கேட்டு சளிப்படைந்திருக்கிறோம். பதில் அறியாது திணறியிருக்கிறோம். ஆனால், ஒரு கட்டத்தில், அதற்கான பதில் நமக்கு வழங்கப்படுகிறபோது, இறைவனின் அன்பை எண்ணிப்பார்த்து, நாம் நடந்து கொண்ட விதத்திற்கு வருத்தப்படுகிறோம்.
இன்றைய வாசகத்தில், கடவுளின் வழிகள், நாம் ஆச்சரியப்படக்கூடிய இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பவுலும் அவரோடு இருந்த சீடர்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையில் இருக்கிறவர்கள் வாய்ப்பு கிடைக்கிறபோது, நிச்சயம் தப்பிப்பதற்கு முயற்சி எடுக்கிறவர்களாகத்தான் இருப்பர். பவுலுக்கும், சீடர்களுக்கும் இயற்கையே அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்தும் அவர்கள் தப்ப நினைக்கவில்லை. அவர்களின் அந்த செயல், காவல் காத்துக் கொண்டிருந்த காவலரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவமாக இருக்கிறது. ஒரு நிகழ்வை கடவுள் எப்படி அற்புதமாக, பயன்தரும் அனுபவமாக மாற்றுகிறார் பாருங்கள். பவுல் நினைத்திருந்தால் தப்பியிருக்கலாம். அவர் அப்படி நினைக்கவில்லை. கடவுளின் திருவுளம் எதுவோ, அதன் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கைக்கான பலனை அவர் பெற்றுக்கொண்டார். ஒரு புதிய குடும்பமே இயேசுவை ஏற்றுக்கொள்கிறது.
நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற நிகழ்வுகளை கடவுளின் திருவுளமாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தை இறைவனிடம் வேண்டுவோம். நம்முடைய கடமையை நாம் செய்ய வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணிகளை நாம் செய்ய வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மனநிலையோடு வாழ்கிறபோது, நம் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் கடவுள் நமக்கு நன்மையானதாக மாற்றித்தருவார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்