இறைவனின் திருவுளம் அறிந்து கொள்ள…
2 அரசர்கள் 22: 8 – 13, 23: 1 – 3
“ஆண்டவரின் இல்லத்தில் சட்டநூலைக் கண்டெடுத்தேன்” என்று, தலைமைக்குரு இல்க்கியா கூறும் வார்த்தைகள் இன்றைய வாசகத்தின் தொடக்கத்தில் அமைந்திருக்கின்றன. இந்த நூலின் முக்கியத்துவம் என்ன? இந்த நூல் எதைப்பற்றிக் கூறுகிறது? இந்த நூலில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்திருந்த சட்டங்களும், இஸ்ரயேல் மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. 2 அரசர்கள் 23: 2ல், இது உடன்படிக்கை நூல் என்று குறிப்பிடப்படுகிறது. 2 குறிப்பேடு 17: 9 ல், “ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் அவர்கள் போதித்தனர்” என்கிற வார்த்தைகள் இந்த நூலையே குறிப்பிடுகிறது. 2 அரசர்கள் 11: 12 ல், யோவாசு அரசனாகிறபோது, உடன்படிக்கைச் சுருளேடு அவனிடம் கொடுக்கப்படுவது, அதனுடைய இருப்பை வெளிப்படுத்துகிறது. இணைச்சட்டம் 31: 26 ல், மனாசேயின் ஆட்சிக்காலத்தில், உடன்படிக்கைப் பேழை அருகில் அது வைக்கப்படுவதைப் பார்க்கிறோம், “இத்திருச்சட்ட நூலை எடுத்து, ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் அருகில் வையுங்கள். அங்கே அது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்”. ஆனால், அரைநூற்றாண்டு காலமாக அதை யாரும் பயன்படுத்தாததால், அதை மக்கள் மறந்து விட்டனர். மீண்டும் திருக்கோவிலை பழுது பார்க்கிற நேரத்தில், அது கிடைக்கப் பெறுவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம்.
இந்த திருச்சட்ட நூலை கடவுள் எதற்காக வழங்கினார்? அந்த திருச்சட்ட நூல் மக்களுக்கு எப்படி அமைந்தது? திருச்சட்ட நூல் என்பது மக்களை நல்வழிப்படுத்துவதற்காக, இறைவன் வழங்கிய நெறிமுறைகளாகும். மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை எப்படி அமைத்துக் கொண்டால், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது, திருச்சட்ட நூலில் எழுதப்பட்டிருந்தது. மற்றவர்களை மதித்து வாழ்வதே, அறம் சார்ந்த வாழ்க்கை என்பது தான், திருச்சட்ட நூலின் மையமாக விளங்கியது. இறைவன் ஒருவரே முதன்மையானவர், அவரை அன்பு செய்து, அவருடைய நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது, இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முதன்மையான கட்டளை. ஆனால், காலப்போக்கில் அவர்கள் அதனைக் கருத்தில் கொள்ளாமல், தங்கள் மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்தனர். இறைவனின் கோபத்திற்கு ஆளாகினர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்காததால், இறைவனின் திருவுளம் என்ன? என்பதை அறிய இயலாது போனது.
இறைவனின் திருவுளத்தை அறிந்து கொள்வது எளிதானது. எப்போது நாம் இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோமோ, அப்போது, இறைவனின் திருவுளம் எது? என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறோம். ஆனால், அதனை மறந்து, அதிலிருந்து விலகிச் செல்கிறபோது, அந்த ஆற்றலை இழந்துவிடுகிறோம். இறைவனின் திருவுளம் அறிய, நாம் எப்போதும் அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்து நடப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்