“இறைவனின் செயல்களை மறவாதீர்”
இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் மையமாக இருந்தது யாவே இறைவான் மட்டும் தான். அவர் தான் அவர்களுக்கு எல்லாமுமாக இருக்கிறவர் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அந்த இறைவன் செய்த வல்லமையுள்ள செயல்களை அவர்கள் அடிக்கடி நினைவுகூர்ந்து, தங்களின் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தனர். அதனை ஒரு முக்கிய நிகழ்வாகவே, ஒவ்வொரு ஆண்டும் நினைத்துப்பார்த்தனர். அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இங்கே நினைவுகூர்கிறார்.
இறைவன் செய்த செயல்கள் என்ன? அவற்றில் நினைத்துப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? தொடக்கத்தில் இறைவன் இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதர்களைப் படைத்தார். மனிதன் கீழ்ப்படியாமையால் தவறு செய்தாலும், அவர்களை தொடர்ந்து பாதுகாப்பாக வழிநடத்தினார். தன்னுடைய விலைமதிப்பில்லா சொந்தமாக, இஸ்ரயேல் மக்களை தேர்ந்தெடுத்தார். உருத்தெரியாமல் இருந்த அவர்களுக்கு உருக்கொடுத்தார். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்களை, விடுதலை வாழ்வை நோக்கி அற்புதமாக வழிநடத்தினார். பாலைநிலத்தில் நாற்பது ஆண்டுகள், யாரும் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் உணவளித்தார். தண்ணீர் வழங்கி, மக்களின் தாகம் தணித்தார். இயற்கையின் சீற்றங்களிலிருந்து, மனிதர்களின் தாக்குதல்களிலிருந்து அவர்களை தப்புவித்தார். அவர்களை வழிநடத்த அரசர்களைக் கொடுத்தார். இறைவாக்கினர்கள் வாயிலா அவர்களோடு பேசினார். எவ்வளவுதான், இஸ்ரயேல் மக்கள் நன்றி மறந்தவா்களாக இருந்தாலும், எதிரிகளிடமிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தார். அவர்களுக்கு மெசியாவை வாக்களித்தார். இவ்வாறு, இஸ்ரயேல் மக்களுக்கு எல்லாமுமாக இறைவன் இருந்தார். அதனை நினைவுகூர்வதற்கு திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார்.
நமது வாழ்வில் இறைவன் செய்த எல்லா நன்மைகளையும் எண்ணிப்பார்ப்போம். நாம் ஆபத்தில் இருந்தபோது, தோல்வியில் துவண்டபோது, வாழ்க்கையை நினைத்து கவலை கொண்டபோது, இறைவன் நம்மோடு இருந்து, நம்மை வழிநடத்தியிருக்கிறார். அவர் நமது வாழ்வில் செய்திருக்கிற எல்லா நன்மைகளையும் நாமும் எண்ணிப்பார்த்து, அவருக்குரியவர்களாக வாழ்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்