இறைவனின் குரல்
2 அரசர்கள் 24: 8 – 17
பாபிலோனி வரலாற்றை மாற்றி எழுதிய மிகச்சிறந்த அரசர் உண்டென்றால், நிச்சயம் அது நெபுகத்நேசராகத்தான் இருக்க முடியும். யோயாக்கின் அரசனின் நான்காவது ஆண்டு ஆட்சியில், இந்த படையெடுப்பு நிகழ்ந்தது. அது நெபுகத்நேசரின் முதலாவது ஆண்டு ஆட்சி. தன்னுடைய தந்தை இறந்ததால், படைப்பொறுப்பை ஏற்று, தன்னுடைய எல்கையை விரிவுபடுத்தத் தொடங்கினார். அவருடைய படை, தனக்கு கப்பம் கட்டும் நாடுகளின் படைவீரர்களைக் கொண்டிருந்த மிகப்பெரிய படையாக இருந்தது. நெபுகத்நேசர் யூதாவிற்கு எதிராக வெற்றி பெற்றாலும், அது அவர் பெற்ற வெற்றியாக யூதர்கள் கருதவில்லை. மாறாக, அது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த வெற்றியாகவே கருதினர்.
இஸ்ரயேல் மக்கள் எதற்காக, பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் வெற்றியை, ஆண்டவர் அவர்களுக்கு அளித்த வெற்றியாக கருதினர்? 2அரசர்கள் புத்தகத்தில்(24: 1, 2) பார்க்கிறோம்: “அவனது ஆட்சிக்காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின் மேல் படையெடுத்து வந்தான். எனவே, யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு அடி பணிந்திருந்தான். பின்பு மனத்தை மாற்றிக்கொண்டு, அவனுக:கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். ஆண்டவர் கல்தேயா, சிரியா, மோவாவு, அம்மோன் ஆகிய மக்களினங்களைச் சார்ந்தக் கொள்ளைக் கூட்டத்தாரை அவன் மீது ஏவி விட்டார். அவர் தம் அடியாரான இறைவாக்கினர் மூலம் உரைத்திருந்தவாக்கின்படி, யூதாவுக்கு எதிராக அதனை அழிப்பதற்காகவே, அவர்களை அங்கே அனுப்பினார்”. ஆக, ஆண்டவரின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்காததாலும், இறைவாக்கினரின் அறிவுரையை மதிக்காத காரணத்தினாலும், ஆண்டவர் யூதாவின் எதிரிகளைப் பயன்படுத்தி, அவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றார். இந்த வெற்றி பாபிலோனியர்களின் வலிமையினால் பெற்ற வெற்றி அல்ல, மாறாக, ஆண்டவர் அருள் புரிந்ததால் பெற்ற வெற்றியாகும்.
இறைவன் நம்மை நல்வழிப்படுத்துவதற்காக பல மனிதர்களைப் பயன்படுத்தி நமக்கு அறிவுரை கூறுகிறார். நாம் செல்கிற பாதை தவறானது என்பதையும் நமக்கு அறிவிக்கிறார். இறைவன் நமக்குக் காட்டும் இந்த வழிமுறைகளை உணர்ந்து, அதற்கு ஏற்ப, நம்முடைய வாழ்வை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். இல்லையென்றால், அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்