இறைவனின் உடனிருப்பு
திருவெளிப்பாடு 22: 1 – 7
வழிபாட்டு ஆண்டினுடைய இறுதிநாட்களில் கொடுக்கப்படுகிற வாசகங்கள் பெரும்பாலும், திருவெளிப்பாடு நூலை மையப்படுத்தியதாக இருக்கிறது. இந்த திருவெளிப்பாடு புத்தகம் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அந்த காட்சிகளில் வெளிப்படும் உருவகங்கள் உலக முடிவை நமக்கு அறிவிப்பதாக அமைந்திருக்கின்றன. எதற்காக உலக முடிவு மற்றும் அழிவு சார்ந்தவை இந்த நாட்களில் நமக்குத் தரப்படுகின்றன? நம்மை பயமுறுத்துவதற்காகவா? வாழ்வு தரக்கூடிய இறைவார்த்தை, அழிவு தொடர்பானவற்றை வெளிப்படுத்துவதேன்?
அனைத்துலக அரசராக கிறிஸ்து இயேசு திருவிழாவை கொண்டாடியிருக்கிற நாம், கிறிஸ்து அரசருடைய ஆட்சி எப்படி அமைவதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இப்படிப்பட்ட வாசகங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கண்டிப்பாக இருளின் ஆட்சி நிறைவுக்கு வரும் என்பதையும், ஒளியின் ஆட்சியை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அமைப்பார் என்கிற நம்பிக்கைச் செய்தியையும் இது வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடவுளின் அரசு அனைவருக்கும் வாழ்வளிப்பதற்காக அமைய இருக்கிறது. இந்த அரசில் தகுதி பெறுவதற்கு, நாம் நேர்மையுள்ளவர்களாக வாழ வேண்டும்.
நம்முடைய வாழ்வில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும், நாம் சோர்ந்து போகாதபடிக்கு, ஆண்டவர் நமக்கு பக்கபலமாக இருந்து வழிநடத்துவார். அவரில் நாம் முழுமையாக நம்முடைய நம்பிக்கையை வைப்போம். ஆண்டவர் நம் அருகிருந்து நம்மைக் காப்பாற்றுவார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்