இறைவனின் உடனிருப்பு
செப்பனியா 3: 14 – 17
இன்றைய முதல் வாசகம், இறைவனின் மீட்புச்செய்தியை அறிவிப்பதாக அமைந்திருக்கிறது. ”மகளே சீயோனே! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி! இஸ்ரயேலே! ஆரவாரம் செய்!” என்கிற வார்த்தைகள், இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அழைப்புவிடுக்கிறது. எதற்காக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? எதற்காக புகழ்ந்து ஆர்ப்பரிக்க வேண்டும்? ஏனென்றால், கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கான தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டு விட்டார். அவர்களுடைய பகைவர்களை அப்புறப்படுத்தினார். அது மட்டுமல்ல. இதுவரை, கடவுள் நம்மோடு இருக்கிறாரா? என்று சந்தேகம் கொண்டிருந்தவர்களுக்கு, இப்போது கடவுள் அவர்களுடன் தான் இருக்கிறார் என்பதை, உணர்த்திவிட்டார்.
இறைவன் அவர்களோடு இருந்த நாள் வரை, அவர்கள் எந்தவிதமான பயமும் கொண்டிருக்கவில்லை. எதிரிநாடுகளைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருந்ததே இல்லை. எப்படிப்பட்ட படைபலம் பொருந்திய நாடாக இருந்தாலும், ஆண்டவர் அவர்களோடு இருந்ததால், அவர்கள் எப்போதும் துணிவோடு இருந்தார்கள். யாருக்கும் பயப்படாமல் இருந்தார்கள். ஆனால், இறைவன் அவர்களை விட்டுச் சென்ற நாள் முதல், அவர்களை பயம் தழுவியிருந்தது. எதிரிகள் பற்றி அச்சம் அவர்களின் உள்ளத்தில் மேலோங்கியிருந்தது. இப்போது அந்த அச்சம் அவர்களுக்கு பொருந்தாத ஒன்று. ஏனெனில் ஆண்டவர் அவர்களோடு இருக்கின்றார். எனவே, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க, இந்த இறைவார்த்தை அழைப்புவிடுக்கிறது.
நம்முடைய வாழ்விலும், இறைவன் நம்மோடு இருக்கிறபோது, நாம் எதற்கும் அஞ்சத்தேவையில்லை. அவர் நம்மோடு இருக்கிறவரை, எந்த எதிரிகளும் நம்மை நெருங்கமுடியாது. இறைவன் நிச்சயம் நம்மை எல்லாவித தீமைகளில் இருந்தும் நம்மை நிச்சயம் காப்பாற்றுவார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்