இறைவனின் அழைப்பு
ஆமோஸ் 7: 12 – 15
“என் மக்களாகிய இறைவனிடம் சென்று இறைவாக்கு உரைத்திடு” என்று ஆமோஸ் இறைவாக்கினர் சொல்கிறார். “என்” என்கிற வார்த்தை இங்கு நம்முடைய கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. கடவுள் அனைவருக்குமான கடவுள். இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள். பராமரிக்கிறவர் கடவுள். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே கடவுளுக்கு சொந்தம் .அப்படியிருக்க, கடவுள் ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் “என்” என்கிற உரிமையில் அழைத்தால், அது மற்றவர்களை ஒதுக்குவதாக அர்த்தமாகாதா? என்று நாம் கேள்வி எழுப்பலாம். இது கடவுளையும், அவருடைய திட்டத்தையும் எதிர்மறையாகப் பார்க்கிற பார்வை.
இறைவனையும், அவருடைய செயல்பாடுகளையும் முழுமையாக அறிந்தவர்கள் மட்டும் தான், இறைவனை நேர்மறையாகப் பார்க்க முடியும். இறைவன் இஸ்ரயேல் மக்களை தன் மக்களாக தேர்ந்தெடுத்தார். எதற்காக? அவர்கள் மட்டும் பல சலுகைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவா? இல்லை. அவர்கள் வழியாக அனைத்து மக்களும் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. இஸ்ரயேல் மக்களை தன் மக்களாக அழைத்தாலும், அவர்கள் தவறு செய்தபோது, இறைவன் பொறுத்துக் கொண்டிருக்கவில்லை. கடுமையாக தண்டனை வருவிக்கச் செய்கிறார். அவர்கள் தவறு செய்கிறபோது, அவர்களுடைய பலிகளை வெறுத்து ஒதுக்குகிறார். அவர்களுக்கு எதிராக தன்னுடைய வார்த்தைகளை, இறைவாக்கினர்களை அனுப்பி, சொல்ல சொல்கிறார்.
நம்மையும் இறைவன் அன்பு செய்கிறார் என்றால், நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல. நாம் அவருடைய அன்பிற்கு பாத்திரமானவர்களாக வாழ வேண்டும் என்பதே, அவருடைய ஆசையாக இருக்கிறது. அந்த ஆசையை நிறைவேற்றுகிற நல்ல மக்களாக வாழ, இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்