இறைவனின் அளவு கடந்த அன்பு
ஓசேயா 2: 14 – 16, 19 – 20
இஸ்ரயேலுக்கும், கடவுளுக்கும் இருக்கும் உறவை திருமணம் என்கிற பந்தம் மூலமாக, இறைவாக்கினர் இங்கே வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மணமகளுக்கும், இஸ்ரயேலின் கடவுள் அவளுடைய கணவராகவும் ஒப்பிடப்படுகிறார்கள். இஸ்ரயேல் தன்னுடைய கணவரான “யாவே” இறைவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. வேறு கணவர்களோடு வாழ்ந்து வருகிறார். அதாவது விபச்சாரம் செய்கிறார். இந்த உவமையானது, இஸ்ரயேல் மக்கள், வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றதைக் குறிக்கிறது. குறிப்பாக, பாகால் தெய்வத்தை அவர்கள் வணங்கி, அந்த தெய்வத்திற்கு ஆராதனையும், வழிபாடும் செலுத்தி வந்ததை இது வெளிப்படுத்துகிறது.
இறைவன் அவளுக்கு வரச்செய்திருந்த துன்பத்தின்பொருட்டு, அவள் வேறு தெய்வங்களை நாடிச்சென்றிருக்கலாம். எனவே, அவளுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுப்பேன் என்கிற நம்பிக்கைச் செய்தியை, இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். கடவுள் எப்போதும் இஸ்ரயேல் மக்களின் நலம்விரும்பியாக இருக்கிறார் என்பது இங்கே நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு தான் பாவங்கள் செய்தாலும், அதற்கான தண்டனையை அவர்கள் பெற்ற பிறகு, மீண்டும் அவர்களைத் தேடி வந்து, அவர்களை தன் பிள்ளைகளாக அரவணைக்கிற பாசத்தை இங்கு நாம் பார்க்கிறோம். அந்த அளவுக்கு இறைவன் அவர்கள் மீது அன்பு வைத்திருக்கிறார்.
நம்முடைய வாழ்விலும் கூட, நாம் இறைவனோடு இருக்க வேண்டும் என்பதைத்தான் இறைவன் விரும்புகிறார். நாம் அவருடைய அன்பை உணர வேண்டும். அவர் காட்டுகிற வழியில் நடக்க வேண்டும். எப்போதும் அவருடைய நீதி, நெறிகளுக்கு ஏற்ப, நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் ஆண்டவரின் குரலுக்கு நாம் செவிமடுப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்