இறைவனின் அன்பு
எரேமியா 31: 7 – 9
இஸ்ரயேல் மக்களுக்கான நம்பிக்கைச் செய்தி இன்றைய வாசகத்தில் வழங்கப்படுகிறது. அது என்ன நம்பிக்கைச் செய்தி? ”நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்”. இஸ்ரயேல் மக்கள் செய்த பாவங்களுக்கு, தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இப்போது, அவர்களுக்கு ஆறுதலின் காலம் காத்திருக்கிறது. இறைவன் எப்போதும் நாம் செய்த பாவங்களை நினைவுகூர்கிறவர் அல்ல. பாவத்திற்கான தண்டனை பெற்ற பிறகு, அவர் மீண்டும் அவர்களை வழிநடத்துகிற ஆயனாக வருகின்றார்.
வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்தது. இந்த இரண்டு விதமான விளைவுகளுக்கும் மனிதர்களே காரணம். தவறு செய்கிறபோது, அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொள்கிறோம். நல்லது செய்கிறபோது, இயல்பாகவே மகிழ்ச்சி நம்மிடத்தில் வருகிறது. இந்த இரண்டு விதமான தருணங்களிலும், இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்பது, இந்த வாசகம் நமக்குத் தரும் செய்தி. நாம் மகிழ்ச்சியாக இருக்கிறபோது, இறைவன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். தன்னுடைய படைப்புத்திறனில் மகிழ்ச்சி கொள்கிறார். நாம் துன்பப்படுகிறபோது, நம்மை விட, இறைவன் அதிக துன்பப்படுகிறார். நம்மை மீட்பதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்த துன்பநேரத்தில் நாம் சோர்ந்து விடாதபடிக்கு, அவர் நம்மை தாங்கிப்பிடிக்கிறார். அந்த இறைவனின் அன்பில் நாம் முழுமையாக இணைந்திடுவோம்.
இறைவன் என்றென்றும் நம் அருகிலிருக்கிறார். நமக்கு உதவி செய்கிறார். நம்மோடு இருந்து, நம்மில் செயலாற்றுகிறார். இந்த உலகத்திலிருக்கிற எல்லாரும் நன்றாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார். அந்த இறைவனிடத்தில், நம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்