இறையாட்சி மலரட்டும்
இறைவனின் அரசு பற்றி பல்வேறு விதமான நம்பிக்கை, யூத மக்கள் நடுவில் உலா வந்தன. யூத மக்கள் இந்த உலகத்தைப் படைத்தது கடவுள் என்று நம்பினாலும், இந்த உலகத்தின் மீது அவர்களுக்கு மதிப்பு இருக்கவில்லை. காரணம், இந்த உலகம் தீய ஆவிகளின் பிடியில் இருப்பதாக எண்ணினர். இந்த உலகத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் இந்த ஆவிகள் தான் காரணம் என்று நினைத்தனர். என்றாவது ஒருநாள் இந்த தீய ஆவிகளின் தொல்லைகளுக்கு முடிவு வரும் என்று நம்பினர். அந்த நம்பிக்கையான நாளைத்தான் இறையாட்சி என்று அவர்கள் எண்ணினர். இந்த புரிதலோடு தான், அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
இந்த பிண்ணனியை மனதில் கொண்டு தான், பரிசேயர்கள் இயேசுவிடம் இறையாட்சி எப்போது வரும் என்று கேட்கிறார்கள். இயேசு இறையாட்சி கண்களுக்கு புலப்படும் முறையில் வராது என்கிறார். இதனுடைய பொருள் என்ன? இதனை எப்படி புரிந்து கொள்வது? இறையாட்சி என்பது ஒன்றை அழித்து, புது உலகை கட்டுவது அல்ல. மாறாக, ஒவ்வொருவருமே அதற்காக மாற்றத்தை தங்களுக்குள்ளாக ஏற்படுத்த வேண்டும். எனவே தான், இயேசு புளிப்பு மாவு உவமையைச் சொல்கிறார். அதாவது, ஒரு மனிதருடைய வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி, அது வாழ்விலும், இந்த உலகத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இன்றைக்கு சாதாரண மனிதர்கள் தங்களது நேர்மையான வாழ்வினால் மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அந்த தாக்கமானது மாற்றமாக மலர வேண்டும். அதைத்தான் இயேசு செய்தார். ஆக, நாம் இருப்பது போல இருந்துவிட்டு, மாயாஜாலம் போல இந்த உலகம் மாறும் என்றால், அது இறையாட்சி அல்ல. அப்படி மாற்றமும் ஏற்படாது. மாறாக, மாற்றம் என்பது நம்மிலிருந்து உருவாகி அது மலர வேண்டும். எல்லாவிடங்களிலும் பரவ வேண்டும். அந்த இறையாட்சியைத்தான் இயேசு போதிக்கிறார்.
இன்றைக்கு நாம் எல்லாரும், மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். யாராவது மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். நமக்கு ஏன் தேவையில்லாத வம்பு? என்று ஒதுங்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நாம் மாறுவோம். மாற்றத்தை நாமும் கொண்டு வருவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்