இறையாட்சி – நம்பிக்கையின் செயல்வடிவம்
இயேசுகிறிஸ்து இறையரசை ஒப்பீட்டுப்பேசுகிற நிகழ்ச்சி தரப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து தனது பணியைத் தொடங்கும்போது “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது”(மாற்கு 1: 15) என்று கூறுகிறார்.
இறையாட்சி என்றால் என்ன? யூதர்களைப்பொறுத்தவரை, இந்த உலகத்தைப்பற்றிய அவர்களுடைய பார்வை இதுதான்: இந்த உலகத்தில் தீய ஆவிகளுக்கும், கடவுளுக்கும் இடையே போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. மெசியா வந்து தீமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்று, தன்னுடைய அரசை நிலைநாட்டுவார் என அவர்கள் நம்பினர். மெசியா வரக்கூடிய காலத்தில் ஒருசில அருங்குறிகள் தோன்றும் என்பதும் அவர்களின் நம்பிக்கையாய் இருந்தது. இத்தகைய நம்பிக்கையைத்தான் இயேசு அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறார். இறையரசு எப்படி இருக்கும் என்பதை உவமைகளால் அவர் எடுத்துரைக்கிறார். இறையரசு என்பது நம்பிக்கை செயல்வடிவம் பெறுகிற நிகழ்வு. இயேசுவின் வாழ்வு, துவண்டுபோயிருந்த மக்களுக்கு, காத்திருந்து காத்திருந்து அழுது வீங்கிய விழிகளோடு ‘தங்கள் பிரச்சனைகளுக்கு கடவுள் ஒரு முடிவு தரமாட்டாரா?’ என்ற நம்பிக்கையோடு காத்திருந்த ஏழை, எளியவர்களுக்கு கடவுளின் அன்பை உணரச்செய்வதாக இருந்தது.
நாம் ஒவ்வொருவரும் மற்றவர் வாழ்வில் இறையரசை மலரச்செய்ய முடியும். எப்போது? நம்முடைய வார்த்தைகளால், செயல்பாடுகளால் மற்றவர் வாழ்வில் ஒளி ஏற்றும்போது. அனைவரும் இறையரசை அனுபவிக்க நம்மால் இயன்றதை, கடவுள் காட்டும் வழியில் செய்வோம்.
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்