இறையனுபவம்
1அரசர்கள் 19: 9, 11 – 16
இன்றைய வாசகம் “இறையனுபவம் என்றால் என்ன?“ என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இன்றைக்கு இறையனுபவத்தைப் பெறுவதற்காக பல இடங்களுக்கு, பல இலட்சங்களை செலவு செய்து மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இறைவனை அந்த இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியுமா? இங்கே தரிசிக்க முடியுமா? என்று அங்கலாயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைதியில் தான் இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார், அமைதியில் தான் இறைவனை அனுபவித்து உணர முடியும் என்பது இன்றைய வாசகத்தில் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
ஆண்டவர் தன்னை எலியா இறைவாக்கினருக்கு வெளிப்படுத்த விரும்புகிறார். எனவே, ”வெளியே வா! மலைமேல் என் திருமுன் வந்து நில்!” என்று சொல்கிறார். சுழற்காற்று எழும்புகிறது. அதில் ஆண்டவர் இல்லை. காற்று பிளந்து பாறைகளைச் சிதறடிக்கிறது. அதிலும் இறைவன் இல்லை. இறுதியாக, அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதில் தான், இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார். ஆக, கோடி கோடியாக செலவழித்துக் கட்டும் ஆலயங்களிலோ, சடங்கு,: சம்பிரதாயங்களுக்காக பொருட்களை வீணடிக்கும் வழிபாடுகளிலோ கடவுள் தோன்றியிருக்கவில்லை. மாறாக, அமைதியின் வடிவத்தில் தன்னை வெளிப்படுத்துகிறார்.
நாமும் இறைவனை பல இடங்களில் தேடுகிறோம். இறைவன் அங்கு இருப்பார், இங்கு இருப்பார் என்று ஓடுகிறோம். ஆனால், இறைவன் அமைதியான உள்ளத்தில் இருக்கிறார். தன்னை உண்மையான உள்ளத்தினருக்கு வெளிப்படுத்துகிறார். அன்பும், அமைதியும் நிறைந்த உள்ளத்தில் அவர் வசிக்கிறார். நம்முடைய உள்ளத்தை இறைவன் வசிக்கிற உள்ளமாக மாற்ற முனைவோம். ஷ
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்