இறையனுபவம்
யோவான் நற்செய்தியிலே இறையியல் சற்று ஆழமானதாக இருக்கிறது. காரணம், யோவான் இயேசுவின் வார்த்தைகளை மட்டும் எழுதவில்லை. அந்த வார்த்தைகளை தான் புரிந்துகொண்ட விதத்தில் எழுதியிருக்கிறார். அந்த புரிதல் மேலோட்டமான அறிவின் மூலமாக வந்ததில்லை. மாறாக, ஆழ்ந்த சிந்தனையின் மூலமாக, இயேசுவின் வார்த்தைகளை மீண்டும், மீண்டுமாக தியானித்தது மூலமாக வந்தது. இயேசுவோடு வாழ்ந்த யோவானுக்கு, அவரோடு இருந்தபோது, இயேசுவின் போதனைகள் அவ்வளவாக அவருக்கு விளங்கியிருக்கவில்லை. ஆனால், இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அவருடைய வார்த்தைகளை தனது வாழ்வின் அனுபவத்தோடு பொருத்திப்பார்த்தபோது, அதில் இருந்த உண்மையை அவர் கண்டுகொண்டார்.
இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னை இறைத்தந்தையோடு இணைத்துப்பேசுகிறார். கடவுள் எப்படி இருக்கிறார் என்பதை இயேசுவிடமிருந்து அறிந்துகொள்ளலாம். ஏனென்றால், இயேசுவின் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள். இயேசுவின் உணர்வுகள் கடவுளின் உணர்வுகள். இயேசுவின் செயல்பாடுகள் கடவுளின் செயல்பாடுகள். பாவத்திற்கு எதிராக, கடவுள் எப்படி எழுகிறார் என்பதை இயேசுவின் வாழ்விலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். மனிதர்களைக் கடவுள் எப்படி பார்க்கிறார் என்பதையும், இயேசுவின் வார்த்தைகள் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
இயேசுவை முழுமையாக அறிந்துகொண்டவர்கள், நிச்சயம் தந்தையாகிற இறைவனை அறிந்திருப்பார்கள். ஏனென்றால், இயேசு கடவுளின் பிரதிபிம்பம். இயேசுவின் வார்த்தைகளையும், அவருடைய போதனைகளையும் நாம் நன்கு அறிந்துகொண்டால், கடவுளை நாம் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்