இறையடியார்கள்

1அரசர்கள் 21: 17 – 29

கடவுள் முன்னிலையில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர் அரசராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதை அழுத்தம் திருத்தமாக இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் மீது ஆசைப்பட்ட ஆகாபு அரசன், தன் மனைவியின் சதிச்செயலுக்கு உடன்பட்டு, அவனைக் கொலை செய்துவிடுகிறான். அந்த தோட்டத்தை அபகரிப்பதற்காகச் செல்கிறான். ஆனால், ஆண்டவர் இறைவாக்கினர் எலியாவை அனுப்புகிறார். தவறு செய்வனான ஆகாபு மட்டுமல்ல, அந்த தவறுக்கு உடந்தையாக இருந்த அவனுடைய மனைவி ஈசபேலும் இறைவனின் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாகிறாள்.

இந்த பகுதியில், இறைவாக்கினரின் பணியை நாம் சற்று ஆழமாகப் பார்க்கலாம். வரலாற்றின் துணிவுள்ள சில மனிதர்களின் விழுமியங்களை இங்கே எலியாக படம்பிடித்துக் காட்டுகிறார். தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவருடைய தவறை அவருடைய நெஞ்சுக்கு நேரே நின்று எதிர்கொள்வது தான் அந்த விழுமியம். ஆகாபு அரசன் தீய, கொடூரமான, ஒழுக்கமில்லாதவனாக இருக்கிறான். அவனுக்கு எதிராக, அவனுடைய தவறைச் சுட்டிக்காட்டுவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவன் செய்த கொலை மற்றும் திருட்டை துணிவோடு அறிவிக்கிறார். தவறு செய்த ஆகாபு அரசனே, எலியாவின் துணிவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறவராக, ”என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?” என்று பயப்படுகிற அளவுக்கு, எலியா விளங்குகிறார்.

இறைவனின் ஆற்றல், ஆதரவு நம்மோடு இருக்கிறபோது நிச்சயம் நாம் யாருக்கும் பயப்பட மாட்டோம். இன்றைக்கு தமிழகத்தில் ஆளத்தெரியாத, ஆளத்திராணியில்லாதவர்கள் கையில் அதிகாரம் இருக்கிறது. எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து கொண்டு, மக்களுக்காக போராடுகிறவர்களை, ஏவல்துறை கொண்டு அடக்கி ஆள முற்படுகிறார்கள். ஆனால், காவல்துறையின் இவ்வளவு அட்டூழியங்களையும், வன்முறைகளையும், அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும் துணிவோடு எதிர்கொண்டு, மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் சமூகப்போராளிகள் ஒவ்வொருவரும் இறைவனின் அடியார்களே. அவர்களுக்கு நம்மால் இயன்ற ஆதரவளிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.