இறைநம்பிக்கை எது?
தொழுகைக்கூடத்தலைவர் பதவி என்பது யூத மக்களால் மதிப்பும், மரியாதையுமிக்க ஒரு பதவி. தொழுகைக்கூடத்தில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவர்தான் பொறுப்பு. அப்படிப்பட்ட நபர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்தார் என்பது ஆச்சரியமான செய்தி. ஏனென்றால், இயேசுவின் போதனைகளும், புதுமைகளும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும், மேல்மட்டத்தலைவர்களிடையே வெறுப்பைத்தான் சந்தித்திருந்தது. இயேசுவைப்பற்றி தவறான எண்ணங்கள் அவர்களிடையே மேலோங்கியிருந்தது. அதனால் தான், தொடக்கத்தில் தொழுகைக்கூடங்களில் போதிப்பதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் பிற்காலத்தில் அவ்வளவாக இயேசுவுக்கு கிடைத்திருக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவைத்தேடி வருவது, மேல்மட்டத்தலைவர்கள் மத்தியில் அவருக்கு அவப்பெயரைப்பெற்றுத்தரலாம். அதையெல்லாம் மீறி அவர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்திருப்பது, இயேசுவின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மகள் மீது வைத்திருந்த பாசம்.
சிறுமி இறந்துவிட்டாள். போதகரைத்தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற செய்தி கிடைத்தபோதிலும், இயேசு அவரிடத்திலே நம்பிக்கையை மட்டும் விடாமலிருக்கச்சொல்கிறார். தொழுகைக்கூடத்தலைவர் வந்ததே நம்பிக்கையில்தான். ஏனெனில் அவருடைய மகள் வருகின்றபோதே சாகுந்தருவாயில் இருந்தார். அதாவது, மருத்துவர்களால் கைவிடப்பட்டநிலையில், அவர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியைச்சந்தித்த நிலையில், கடைசி முயற்சியாக இயேசுவிடம் வந்திருக்கிறார். கடவுள் மீது வைத்துவிட்ட நம்பிக்கையை எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்பதே இயேசு கற்றுத்தரும் பாடம். இந்த உலகத்தை ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் படைத்திருக்கிறார். இறைவனால் முடியாதது இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்கிற சிந்தனையை இயேசு இங்கே ஆழப்படுத்துகிறார்.
இறைவனை நம்பி நாம் செய்கிற எந்தவொரு செயலும் பொய்த்துப்போவதில்லை. அது எப்போதும் நமக்கு வெற்றியே என்பதை உணர்ந்து, நம் விசுவாசத்தை ஆழப்படுத்த இறைவனிடம் மன்றாடுவோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்