இறப்பே .. புது வாழ்வு
நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம் வாழ்வின் இலக்கின் தொடக்கமும் இறப்பே. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான் என வெளிப்படுகிறது.
இயேசுவின் பார்வையில் இறப்பு ஒரு திருமுழுக்கு. புது வாழ்வின் தொடக்கம். இயேசு, ஒவ்வொரு சாவையும் வாழ்வின் உதயமாகக் கண்டார். இலாசரின் இறப்பு கடவுளின் மாட்சி வெளிப்படும் நிகழ்வாகக் காண்கிறார்.(யோவா 11:4) பன்னிரெண்டு வயது சிறுமியை உயிர்பெறச் செய்தபோது, “விலகிப் போங்கள், சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்”( மத் 9 :24) என்றபோது, இறப்பை, புத்துயிர் பெற உறங்கி விழிக்கும் அன்றாட நிகழ்வாகக் காண்கிறார்.
எவ்வாறு இறக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு வாழ வேண்டும். அமைதியாக, நிம்மதியாக, வேதனையின்றி,தனிமையின்றி சாக வேண்டுமென்றால், வாழும்போதும் அவ்வாரே வாழ வேண்டும். வாழ்க்கை எப்படியோ அப்படியே மரணமும். இறைவன் பாராட்ட, மனிதர் புகழ, உன் மனம் பெருமிதமடைய வாழ்ந்துகொள். மரணம் மகிழ்ச்சியாக இருக்கும். புது வாழ்வாக அமையும்.
~அருட்திரு ஜோசப் லியோன்