இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம் !
தன்னைப் பின்பற்ற விரும்பும் இளைஞனுக்கு இயேசு கொடுக்கும் அறிவுரை, ‘இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்’. உண்மையில், அந்த இளைஞன் இயேசுவிடம் வேண்டுவது, தந்தை இறக்கும் வரையில் அவரைப் பராமரித்துவிட்டு, அதன்பின் இயேசுவைப் பின்தொடர அனுமதி. ஆனால், இயேசுவின் பார்வை வேறாக இருக்கிறது. என் அழைத்தலை ஏற்பதை ஒத்தி வைக்கவேண்டாம். நாள் ஆக ஆக, எண்ணங்கள் மாறலாமே? ஏற்றி வைத்த அழைத்தல் என்னும் அகல் விளக்கு அணைந்துவிடலாமே? எனவேதான், அழைத்தலை உடனே ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.
நமது குடும்பங்களில், பங்குகளில் இளையோர் அழைத்தலில் ஆர்வம் காட்டினால் அவர்களை உடனே ஊக்குவிப்போம். காலம் தாழ்த்தும்போது, அழைத்தலை இழக்க நேரிடலாம்.
மன்றாடுவோம்: இயேசுவே, அழைத்தலின் நாயகனே, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய இளையோருக்காக வேண்டுகிறோம். உமது விருப்பத்திற்கேற்ப, அதிக எண்ணிக்கையில் இளையோரைத் தேர்ந்தெடுத்து, அர்ப்பண வாழ்வை அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
–அருள்தந்தை குமார்ராஜா