இருளும், உயிர்ப்பின் ஒளியும் !
இயேசு நிக்கதேமுவுடன் நிகழ்த்திய உரையாடல் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. அதில் இறைமகன் இயேசு உலகின் ஒளியாகச் சுட்டப்படுகிறார், உலகின் பாவ இயல்புகள் ஒளியை எதிர்க்கும் இருளாகக் காட்டப்படுகின்றன. ஒளி-இருள் பற்றி இன்று சிந்திப்போம்.
1. இயேசு உலகின் ஒளி: “உலகை மீட்கவே கடவுள் தம் மகனை இந்த உலகிற்கு அனுப்பினார். உலகிற்குத் தண்டனை அளிக்க அல்ல” என்கிறார் இயேசு. இயேசுவே அந்த மீட்பு. மீட்பின் உருவமாகத் தம்மை உலகின் ஒளி என்கிறார் இயேசு. “உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்” என்கிறார் ஆண்டவர். உயிர்ப்பின் மக்கள் இயேசுவின் பாஸ்கா ஒளியில் வாழ விரும்புகின்றனர். தங்கள் பணிகள் அனைத்தையும் இயேசுவோடு இணைந்தே செய்கின்றனர்.
2. உலகின் இருள்: இயேசுவை நம்பாமல், உலகின் தீமைகளைச் செய்துவாழ்பவர்கள் இருளின் மக்கள். இவர்கள் இயேசுவை நாடுவதில்லை. “ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்” என்று வாசிக்கிறோம். இயேசு தரும் மீட்பைவிட, பாவத்தின் கவர்ச்சி பெரிதாக இருக்கின்றது என்னும் உண்மையை உணர்கிறோம்.
நமது ஆர்வம் எங்கே உள்ளது? ஒளியிடமா, அல்லது இருளிடமா? தூய ஆவி தருகின்ற கட்டுப்பாடு மிக்க விடுதலையை நாம் நாடுகிறோமா? அல்லது இந்த உலகம் தருகின்ற கட்டுப்பாடற்ற உலக இன்பங்கள், களியாட்டங்கள், பொழுதுபோக்குகள் மீது ஆர்வம் கொள்கின்றோமா?
இருளை விலக்கி, ஒளியை நாட அருள்வேண்டுவோம்.
மன்றாடுவோம்: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இருளின் ஆற்றல்கள் காட்டும் கவர்ச்சியில் நாங்கள் மயங்காமல், உலகின் ஒளியாம் உம்மையே நாடிவரும் அருளை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ பணி குமார்ராஜா