இருளில் பேசியவை ஒளியில் கேட்கும்…
லூக்கா 12:1-7
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நாம் அதிகமாக ரகசியங்களை, பேசக்கூடாதவைகளை பேசுவதற்கு நாம் தேடுகின்ற இடம் இருள். அந்த இடம் பாதுகாப்பானது அல்ல, அனைத்தும் வெளியே தெரிந்துவிடும். இருளில் பேசியது அனைத்தும் ஒளியில் கேட்கும். ஆகவே கவனமாய் இருங்கள் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் ரகசிங்களை பேசுவதற்கு, இச்சைக்குரிய காரியங்களை பேசுவதற்கு, செய்வதற்கு பலவிதமான வாய்ப்புகள் உள்ளது. மறைவாக பேசுவற்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளதோ அதே அளவுக்கு அது தெரிவதற்கும் உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்? இரண்டு வழிகள் எப்போதும் உண்டு.
1. ஒளியை விரும்பலாம்
இந்த உலகில் எதுவும் மறைவு கிடையாது என்ற விழிப்புணர்வு வேண்டும். அந்த விழிப்புணர்வு நாம் செய்யும் செயல்களை ஒளிக்கு கொண்டு வர வேண்டும். ஒளியில் இருந்தால் எப்படி நாம் இருப்போமோ அந்த பயிற்சியை நாம் தனிமையில், இருளில் இருக்கும் போது செய்ய வேண்டும. அதற்கு ஒளியை விரும்ப வேண்டும்.
2. இருளை வெறுக்கலாம்
இருளில் செய்ய கூடிய பாவங்களை வெறுக்க வேண்டும். அது என் உடலுக்கும், மனதிற்கும், ஆன்மாவிற்கும் ஆபத்தானது. ஆகவே நான் வெறுக்கிறேன் என்ற மனபக்குவம் மகிழ்ச்சியான மாற்றத்தை உருவாக்கும்.
மனதில் கேட்க…
1. நான் இருளில் பேசியது வெளியே மிக சத்தமாக கேட்கும் அல்லவா?
2. ஒளியை விரும்பி இருளை விரட்டுவது மிகவும் நல்லது தானே?
மனதில் பதிக்க…
நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.(லூக் 12:3)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா