இருளில் ஒளியென மிளிர்வர்
திருப்பாடல் 112: 4 – 5, 6 – 7, 8 – 9
யார் இருளில் ஒளியென மிளிர்வர்? திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்: நீங்கள் கடவுளுக்கு பயந்து வாழ்கிறபோது, இருளில் ஒளியாக மிளிர்வீர்கள். இதை எப்படி புரிந்து கொள்வது? இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களில் பெரும்பாலானோர் ”பத்தோடு ஒன்று பதினொன்று” ரக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள். அவர்கள் அப்படி வாழ்வதற்கு முக்கியமான காரணம், அப்படி வாழவில்லை என்றால், இந்த உலகத்தை விட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதால் தான். இந்த உலகம் தனக்கென ஒரு சிலவற்றை மதிப்பீடுகள் என்ற பெயரில் வைத்திருக்கிறது. ஆனால், அவை கடவுள் பார்வையில் அநீதியானவை. இந்த உலக மதிப்பீடுகளை வாழ்கிறவர்கள், நிச்சயம் கடவுள் பயம் இல்லாதவர்கள். அதனால் தான், அவர்களால் துணிவோடு மற்றவர்களின் உயிரை எடுக்க முடிகிறது. மற்றவர்களை துன்புறுத்தி அதில் இன்பம் காணமுடிகிறது. மற்றவர்களின் பொருளைச் சுரண்ட முடிகிறது. இப்படியாக, கடவுள் பயம் இல்லாத உள்ளத்தில், நேர்மையான சிந்தனையும், உள்ளத்தெளிவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், கடவுளுக்கு அஞ்சக்கூடியவர்கள், நேர்மையாக இருப்பதனால் வரக்கூடிய சவால்களை அறிந்திருக்கிறார்கள். அதனால் எதிர்கொள்ளக்கூடிய துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆனாலும், அவையனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால், அவர்களிடத்தில் கடவுள் பயம் இருக்கிறது. நேர்மையாக இருப்பதன்பொருட்டு, அவர்கள் சந்திக்கும் துன்பத்தைக்கண்டு அவர்கள் அஞ்சுவதும் இல்லை. நிறைவாக வாழ்கிறார்கள். ஒளிவீசுகிறார்கள். எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
நமது வாழ்வில் நாமும் இத்தகைய மகிழ்ச்சியான வாழ்வை வாழ, திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். அதுதான் நிறைவான மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் சொல்கிறார். அப்படிப்பட்ட வாழ்வை வாழ, நாம் ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்