இருளினை அவரின் அருளால் …
(யோவான் 20 : 11-18)
கிறித்தவர்களின் உண்மையான முகத்தைப் பார்க்கும் போது இயேசு கிறித்து உயிருடன் எழுந்தார் என்ற உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறாhர் – கடவுள் மறுப்பாளர் பிரடெரிக் நீட்சே. இயேசுவை அதிகமாக அன்பு செய்தவர்களில் மகதலென் மரியாவுக்கு சிறப்பான இடம் உண்டு. அப்படிப்பட்டவர்க்கு எப்படி இயேசுவைக் கண்டு கொள்ள முடியவில்லை? தோட்டக்காரர் என்று எப்படிக் கூறுகின்றார்? இந்தக் கேள்விகளுக்கு இருபதாம் பிரிவின் முதல் இறைவார்த்தைப் பதிலாக அமைகின்றது. “இருள் விலகும் முன்பே”. இங்கே “இருள்” என்ற ஒற்றைப் பதத்தை நேரடியான மற்றப் பொருள் பொதிந்த பதமாகவே நான் பார்க்கிறேன். யோவான் நற்செய்தியாளரது, வார்த்தைகளின் ஆழம் அளப்பரியது என்பதை நாம் அறிவோம்.
இந்த “இருள்” தன் அன்பரை இழந்துவிட்டேன் என்ற கவலையினாலும் கண்ணீராலும் வந்த இருள். ஆண்டவர் இயேசு இறந்து விட்டார் என்ற அறியாமையினால் வந்த இருள். மூன்றாம் நாள் அவரின் உயிர்ப்பில் நம்பிக்கையில்லாமல் அவரின் சடலத்தை மட்டுமே அவநம்பிக்கையோடு காணச் சென்றவளின் இருள். கல்லறைத் திறந்திருப்பதைப் பார்த்தவுடன் வந்த திகிலால் வந்த இருள். வெற்றுக் கல்லறை சற்றென உருவாக்கிய இருள். வெள்ளைத் துணியைப் பார்த்தவளின் கொள்ளையடிக்கப்பட்டவளின் இருள். அவர் உயிர்த்தெழுந்திருக்கமாட்டார் யாரோ எடுத்துத்தான் போயிருப்பார்கள் என்ற முற்சார்பு எண்ணத்தில் வந்த இருள்.
நம் அன்றாட வாழ்விலும் அனுதினக் கவலையும் கண்ணீரும் அறியாமையும் அவநம்பிக்கையும், திகிலும் முற்சார்பு எண்ணங்களும் இயேசுவின் உயிர்ப்பினை உணராமல் நம்மை இருளுக்குள் தள்ளி விடுகிறது. உயிர்த்த ஆண்டவரின் மகிழ்ச்சியில் நாம் பங்குகொள்ள தடைக்கற்களாக நின்று தடுத்துவிடுகிறது. இவ்விருளினை அவரின் அருளினால் வெல்வோம். இந்த பாஸ்கா காலம் அவரில் மகிழ்வுற நம்மை அழைத்துச் செல்லட்டும்.
– திருத்தொண்டர் வளன் அரசு