இருத்தல் இன்பம் பயக்கும்
மாற்கு 3: 13 – 19
இருத்தல் இன்பம் பயக்கும்
தமிழ் மரபாலும் சரி, திருச்சபை மரபிலும் சரி, இருத்தலின் வழியாகத்தான் இன்பம் பெற்றிருக்கின்றார்கள். ஓர் இளைஞன் குறிப்பிட்ட குருவை நாடி அவரோடு இருக்கின்றபோது தான் வாழ்க்கையின் தத்துவத்தை பெற்றுக் கொள்கிறான். குரு அவனுடைய இருத்தலின் தன்மையை வைத்து தான் அவனை உருவாக்குகின்றார். கிரேக்க மரபிலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப் படுகின்றது. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற கிரேக்க அறிஞர்களை நாடி இருந்து தான் வாழ்வின் சுவையை அறிந்து கொள்கின்றனர். உலகப் பாரம்பரியங்களில் பயிற்சி பெறும் வாலிபர்கள் இவ்வாறு அறிவு நிறைந்த பெரியவர்களோடு இருந்து தான் அறிவு தெளிவு பெறுகின்றார்கள். அதனால் தான் கிராமப்புறங்களில் இந்த திண்ணை அமைப்பு இன்னும் இருக்கிறது. பொழுது போக்கிற்காக சிறுவர்கள் அந்த திண்ணையில் இருந்து தான் பெரியவர்களிடம் நாகரீகம் பற்றி கேட்டு தெரிந்து கொள்வார்கள்.
ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஒரு சிலரை விரும்பி தம்மிடம் இருக்க அழைக்கின்றார். எதற்காக இந்த பன்னிருவரை மட்டும் தோ்வு செய்கின்றார் என்றால் கடவுள் அகில உலகையும் படைத்து விட்டு இறுதியில் தம் மக்களாக தோ்ந்து கொண்டதை பன்னிரு கோத்திரங்கள் அடங்கிய அந்த இஸ்ரயேல் இனத்தைத்தான். இஸ்ரயேல் கடவுளின் அன்புக்கு ஏற்றவாறு உருவாக்கிய புதிய படைப்பு. அது போலவே இயேசுவும் புதிய இனத்தைப் படைத்து தமக்கே உரியவர்களாக அவர்களை உருவாக்க விரும்பினார். ஆகவே பன்னிரண்டு என்ற எண் இயேசு உருவாக்க விரும்பிய திருச்சபையின் ஓர் அடையாளம். அவர்கள் எத்தகைய பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதனைக் கற்றுக் கொடுக்கின்றார். அவர்கள் இயேசுவோடு இருந்து தான் கற்று கொள்கின்றார்கள்.
நான் யாரோடு இருக்க விரும்புகிறேன்? நாம் திருச்சபையின் அங்கத்தினர்களாக இருக்கிறோம். அப்படியென்றால் யாரோடு இருக்க வேண்டும்? எதோடு இருக்கின்றோம்? பெரும்பாலும் தொலைக்காட்சி, அலைபேசி, சூதாட்டத்தோடு தான் இருக்கின்றோம். இயேசுவோடு இருப்போம், வாழ்வில் இன்பம் பயக்கும்.
அருட்பணி. பிரதாப்