இயேசு மூட்டிய தீ
இயேசு இந்த உலகத்திற்கு வந்து, அவரது பணிவாழ்வை ஆரம்பித்தபோது, இலக்கில்லாமல் ஆரம்பிக்கவில்லை. தன்னுடைய பணிவாழ்வில், தனக்கென்று ஓர் இலக்கை வைத்திருந்தார். அந்த இலக்கை நிறைவேற்றுவதை, தனது வாழ்வின் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தார். அதைப்பற்றித்தான், இன்றைய நற்செய்தி வாயிலாக இயேசு பேசுகிறார்.
மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அதுதான் தனது விருப்பம் என்று சொல்கிறார். அது என்ன தீ? நேர்மையாளர்கள் இன்னும் நேர்மையோடு வாழவும், அமைதியை ஏற்படுத்த விரும்புவோர் அவர்களோடு கடவுள் இருக்கிறார் என்பதை உணரவும், நல்லவர்கள் இன்னும் அதிக நன்மை செய்வதற்கான எரிபொருளாக இயேசு வந்திருக்கிறார். மனிதர்களுக்குள்ளாக நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணமிருந்தாலும், செய்வதா? வேண்டாமா? என்கிற விவாததத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமாய், அவருடைய வாதம் அமைந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதுதான் இன்னும் பல நல்லவர்களை உருவாக்குவதற்கு துணையாக இருந்தது.
இயேசு என்கிற ஒரு மனிதன், இந்த உலகத்தையே தன் வசப்படுத்த முடிந்தது என்றால், தனியொரு ஆளாக அல்ல. அவர் மூட்டிய தீ பற்றி எரிந்ததால். அந்த தீயின் தாக்கம் தான், இன்றைக்கு நற்செய்தியானது உலகம் முழுவதும் எரிந்து கொண்டிருப்பதற்கு காரணமாய் அமைந்திருக்கிறது. அந்த தீ நம்முள்ளும் எரியட்டும். இந்த உலகம் மலரட்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்