இயேசு மீண்டும் வருவார்
பாலஸ்தீன நாட்டின் பாரம்பரியப்படி, ஒருவர் இறந்த மூன்றுநாளுக்குப்பிறகு, கல்லறைக்கு அவருடைய உறவினர்கள் சென்று வருவது வழக்கம். ஏனென்றால், முதல் மூன்று நாட்கள் இறந்தவரின் ஆவி கல்லறையைச்சுற்றி வந்து, தன்னுடைய உடலுக்குள் மீண்டும் செல்ல முயற்சி செய்யும் என்பது யூதர்களின் நம்பிக்கை. ஆனால், மூன்று நாட்களுக்குப்பின் உடல் அழுகிவிடுவதால், ஆவிக்கு தன்னுடைய உடலை அடையாளம் காணமுடியாமல், தனது உலகத்திற்கு திரும்பிவிடும். வாரத்தின் முதல் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. யூதர்களுக்கு ஓய்வுநாள் சனிக்கிழமை. ஓய்வுநாள் முடிந்தவுடன் விடியற்காலையிலேயே, மகதலா மரியா கல்லறைக்குச்செல்கிறாள். இயேசுவின் உடலைக்காணவில்லை என்றவுடன், அவள் திரும்பிவந்து பேதுருவிடமும், யோவானிடமும் சொல்கிறாள்.
இன்றைய நற்செய்தியில், யோவான் அங்குத்துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டதாகவும், அத்துண்டு மற்றத்துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச்சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பார்க்கிறோம். விவிலியத்திலே இதற்கு பொருள் இருக்கிறது. பாலஸ்தீனப்பகுதியில், தலைவர் வீட்டிலே சாப்பிடும்போது, கைதுடைப்பதற்கான துணி மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர் சாப்பிட்டவுடன் கைத்துணியைத் துடைத்தால், அதை மீண்டும் மடித்து வைத்துவிட்டுச்சென்றுவிடுவார். ஒருவேளை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, யாராவது வந்தால், அந்தத்துணியை அப்படியே மடிக்காமல், சுருட்டிப்போட்டுவிட்டுச்சென்றுவிடுவார். இதனுடைய பொருள், அவர் மீண்டும் வருவார் என்பது. இங்கே நற்செய்தியில், துணி சுருட்டிவைக்கப்பட்டிருந்தது என்றால், அதனுடைய பொருள் இயேசு மீண்டும் வருவார் என்பதை உணர்த்துகிறது. இதைத்தான் திருத்தூதர்பணி 1: 11 ல் பார்க்கிறோம்: “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லாவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்”. ஆக, இயேசு மீண்டும் வருவார் என்கிற செய்தி நமக்கு உறுதியாகத்தரப்படுகிறது.
கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார் என்பது நம் விசுவாசத்தின் மறைபொருள். தளர்ந்து போயிருக்கிற, துன்பங்களால் வாழ்வே வெறுத்துப்போயிருக்கிற உள்ளங்களுக்கு இது மிகப்பெரிய ஆறுதல் செய்தி. கிறிஸ்து மீண்டும் வருவார் என்கிற செய்தியே நமக்கு மகிழ்வைத்தர வேண்டும். துன்பங்களைப்பற்றி கவலைப்படாமல், இயேசு வருவார் என்கிற புத்துணர்ச்சியோடு வாழ்வை எதிர்கொள்ளுவோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்