இயேசு, மரி, சூசை – திருக்குடும்பம் பெருவிழா
1சாமுவேல் 1: 20 – 22, 24 – 28
அன்னாவின் அர்ப்பணம்
விவிலியத்தில் யார் தனியொருவராக அதிகமாக துன்பங்களைச் சந்தித்தவர் என்று பார்க்கிறபோது, நிச்சயம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு அதில் முதல் இடமுண்டு. ஏனென்றால், அவர் கடவுளின் மகனாக இருந்தபோதும், மனித வடிவெடுத்தார். வல்லமை இருந்தாலும் கத்தாத செம்மறியாக இருந்தார். தவறே செய்யவில்லை என்றாலும், அவமானச்சிலுவையை ஏற்றுக்கொண்டார். நமக்காக உயிர்துறந்தார். இதற்கு அடுத்து, நிச்சயம் யோபு என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அதன் பின் இறைவாக்கினர்கள், குறிப்பாக எரேமியா, எலியா என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
விவிலியத்தில், அன்னை மரியாளைத் தவிர, பெண்களில் அதிக துன்பப்பட்டவர்கள் என்கிற பட்டியலைப் பார்க்கிறபோது, அவ்வளவாக நமக்கு யாருடைய பெயரும் தென்படுவதில்லை. அவர்களுடைய அதிகபட்ச துன்பமாக நமக்குத் தரப்படுவது, குழந்தையின்மை. நிச்சயம் அது பெண்களுக்கு மிகப்பெரிய துன்பம் தான். ஆண்வர்க்க சமுதாயத்தில், அத்தகைய கொடுமை நிச்சயம் பெண்களுக்கு அதிகமானது தான். இதில் நிச்சயம் அன்னாவுக்கு இடம் உண்டு. ஆனால், அன்னாளின் அர்ப்பணம், அவர் கடவுளுக்கு செய்து கொண்ட நேர்ச்சையை சரியான விதத்தில் செய்து முடிக்க வேண்டும் என்கிற உணர்வு, நிச்சயம் கடவுளின் பார்வையில் அவருக்கு மிகப்பெரிய ஆசீர்வாதத்தைத் தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கடவுளுக்கு விசுவாசமாக இருந்தால், உண்மையாக இருந்தால், அவருடைய அருளும், ஆசீரும் நமக்கு எப்போதும கிடைக்கும் என்பதற்கு, அன்னா மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவருடைய வாழ்க்கை நமக்கெல்லாம் மிகப்பெரிய படிப்பினை. அவருடைய வாழ்க்கையைப் பின்பற்றி, நாமும் நம்முடைய அர்ப்பணத்தை ஆண்டவர்க்கு நம்முடைய வாழ்வில் வெளிப்படுத்துவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்