”இயேசு, ‘நமக்கு எதிராக இராதவர் நமக்குச் சார்பாக இருக்கிறார்’ என்றார்” (லூக்கா 9:50)
இன்றைய சிந்தனை
இயேசு தீய ஆவிகளிடமிருந்து பிணியாளர்களுக்கு விடுதலை அளித்தார் என்னும் செய்தியை நற்செய்தி நூல்கள் பல தருணங்களில் குறிப்பிடுகின்றன. தீய ஆவிகளை ஓட்டுகின்ற அதிகாரத்தையும் வல்லமையையும் இயேசு தம் சீடர்களுக்கும் கொடுத்தார். அவர்கள் அந்த அதிகாரம் தமக்கு மட்டுமே உண்டு என நினைத்த தருணத்தில் இயேசு அவர்களது தப்பான கருத்தைத் திருத்துகிறார். சீடர்கள் ”நம்மைச் சாராதவர்” என ஒரு சிலரை ஒதுக்குவது சரியல்ல என இயேசு சுட்டிக் காட்டுகிறார் (லூக் 9:51). சீடர்கள் கருத்துப்படி, அவர்களுக்கு இயேசு தனி அதிகாரம் கொடுத்ததால் அவர்களுக்கு மட்டுமே தீய ஆவிகளைத் துரத்துவதற்கு உரிமை உண்டு. அவர்களது குழுவைச் சாராத வேறு எவரும் இயேசுவின் பெயரால் அதிசய செயல்களைச் செய்வது முறையல்ல. இயேசு இக்கருத்தை ஏற்கவில்லை. கடவுள் வழங்குகின்ற அதிகாரமும் சக்தியும் குறிப்பிட்ட எல்லைகளுக்குள்ளே அடக்கப்பட வேண்டும் எனக் கோருவது முறையல்ல என இயேசு காட்டுகிறார். கடவுள் தாம் விரும்பிய மனிதருக்குத் தம் விருப்பப்படியே தம் வல்லமையை அளிக்க முடியும். அதை நிர்ணயிப்பது மனிதர்கள் அல்ல.
எங்கெல்லாம் நல்லவை நடக்கின்றனவோ அங்கெல்லாம் கடவுளின் செயல் உண்டு என நாம் ஏற்க வேண்டும். நல்லவை நடப்பது நாம் வகுக்கின்ற எல்லைகளுக்கு உள்ளே மட்டுமல்ல, எல்லை மீறியும் நல்லவை நடக்கக் கூடும். எனவே நாம் திறந்த மனத்தோடு கடவுளின் செயலைப் பார்க்க வேண்டுமே ஒழிய நமது குறுகிய பார்வையைக் கடவுளின் பார்வையாகக் கருதக் கூடாது. இன்றும்கூட, சிலர் திருச்சபை மட்டுமே கிறிஸ்துவைப் பறைசாற்ற வேண்டும் என நினைக்கின்றனர். திருச்சபையின் வெளி அமைப்புக்கு உள்ளே உறுப்பினராக இல்லாதவர்களும்கூட கடவுளின் வல்லமையால் செயல்படக் கூடும் என்பதை நாம் ஏற்க வேண்டும். அவர்கள் கிறிஸ்தவமல்லாத பிற சயமத்தவராகவும் இருக்கலாம். எனவே, எத்தனையோ நல்ல மனிதர்கள் வெளிப்படையாகக் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைக் கொண்டிராவிடினும் நம் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு, கடவுளுக்கே தெரிந்த விதத்தில் கிறிஸ்துவின் செயலை ஆற்றுகிறார்கள் என நாம் ஏற்பதே சரி. இந்த உண்மையை இரண்டாம் வத்திக்கான் சங்கம் அழகாக எடுத்துக் கூறுகிறது: ”கிறிஸ்தவர்கள் தம் நம்பிக்கைக்கும் வாழ்விற்கும் சான்று பகருங்கால், கிறிஸ்தவமல்லாச் சமயங்களைப் பின்பற்றுபவர்களோடு முன்மதியுடனும் அன்புடனும் உரையாடல் நிகழ்த்த வேண்டும். அவ்வாறே அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும். மேலும் கிறிஸ்தவமல்லாச் சமயங்களைப் பின்பற்றுபவர்களிடத்தில் காணப்படுகின்ற அருள்நெறி மற்றும் அறநெறி சார்ந்த நலன்களையும் சமூக-பண்பாட்டு விழுமியங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றைப் பேணி வளர்ச்சியுறச் செய்ய வேண்டும்” (காண்க: 2ஆம் வத்திக்கான் சங்கம், ”கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருச்சபைக்குள்ள உறவு”, எண் 2). அப்போது நாம் ”நமக்கு எதிராக இராதவர் நமக்குச் சார்பாக இருக்கிறார்” (லூக் 9:50) என இயேசு கூறிய சொற்களின் பொருளை ஓரளவாவது புரிந்துகொள்வோம்.
மன்றாட்டு
இறைவா, உலகின் பல சூழமைவுகளில் உம் வல்லமை வெளிப்படுவதை நாங்கள் கண்டுணர அருள்தாரும்.
— அருட்திரு பவுல் லியோன் வறுவேல்