இயேசு தரும் வாழ்வு
எங்கே இயேசு, பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் விருந்து உண்கிறார்? யாருடைய வீட்டில் இந்த விருந்து நடைபெற்றது? லூக்கா நற்செய்தியாளர் இந்த விருந்து, மத்தேயுவின் வீட்டில் நடைபெற்றதாக குறிப்பிடுகிறார். ஆனால், மத்தேயு மற்றும் மாற்கு, இந்த விருந்து இயேசுவின் இல்லத்திலோ அல்லது அவர் தங்கியிருந்த வீட்டிலோ நடைபெற்றிருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் சொல்வது போல், இயேசுவின் இல்லத்தில் என்றால், அது கூடுதலான சிந்தனையையும் நமக்குத்தருகிறது.
“அழைத்தல்“ என்கிற வார்த்தைக்கான பொருளாக, விருந்தினர்களை இல்லத்திற்கு அழைப்பது என்பது பயன்படுத்தப்படுகிறது. இயேசு சொல்கிறார்: நீங்கள் விருந்தினர்களாக தற்புகழ்ச்சி உள்ளவர்களையும், அதிகாரவர்க்கத்தினரையும் அழைக்கிறீர்கள். நானோ, தங்கள் குற்றங்களை நினைத்து வருந்துகிறவர்களையும், திருந்துவதற்கு வாய்ப்பிற்காக காத்திருக்கிறவர்களையும் அழைக்கிறேன். ஆம், இயேசு மற்றவர்களை தீர்ப்பிடுவதற்காக அல்ல. மாறாக, அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களை நல்வழி செல்ல, வாய்ப்பு வழங்கக்கூடியவராக இருக்கிறார். அதற்காகத்தான் அவர் வந்திருக்கிறார்.
இயேசுவை உண்மையாக நாம் தேட வேண்டும். உண்மையான உள்ளத்தை வெகுஎளிதாக இயேசு கண்டறிந்துவிடுகிறார். அவர் நாம் திருந்தி வாழ்வதற்கு பல வாய்ப்புகளை வழங்குவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார். அந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி மத்தேயு திருந்தி வாழ்ந்ததுபோல, நாமும் நமது பாவ வாழ்வை விட்டு, திருந்தி வாழ முயற்சி எடுப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜ