இயேசு தரும் வாழ்வு
நற்செய்தி நூல்களில் யோவான் நற்செய்தி புரிவதற்கு சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது. அவரது நற்செய்தியில் இறையியல் கருத்துக்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. ஆனால், அவரின் நற்செய்தியின் அடிப்படையை புரிந்து கொண்டால், மிக எளிதாக அவரின் நற்செய்தியைப் புரிந்து கொள்ளலாம். யோவான் நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில், ”நாம் இதுவரையில் பார்த்திராத கடவுளின் மறுசாயல் தான் இயேசு. இயேசு வழியாக கடவுள் தன்னையே வெளிப்படுத்துகிறார்” என்கிற கருத்தை மையமாக வைத்து, தனது நற்செய்தியை எழுதுகிறார்.
ஆபிரகாம் வாழ்வதற்கும் முன்னால் நான் வாழ்கிறேன், என்று இயேசு சொல்வதன் கருத்தை, நற்செய்தி நூலின் மையத்தின் அடிப்படையில் புரிந்து கொண்டால், நமக்கு அது மிக எளிதானதாக இருக்கும். இயேசுவில் வெறும் மனிதன் மட்டும் குடிகொண்டிருக்கவில்லை. மாறாக, கடவுள் கொடுத்திருக்கிற வாழ்வு இருக்கிறது. தொடகத்தில் கடவுளால், முதல் மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருந்த வாழ்வு, இயேசுவில் இருக்கிறது. அதனைக் கொடுப்பதற்காகவே இயேசு வந்திருக்கிறார். முதல் மனிதன் வழியாக நாம், இறைவன் கொடுத்த வாழ்வை இழந்தோம். இன்றைக்கு கடவுளே அந்த இழந்த வாழ்வைக் கொடுக்க, இயேசு வழியாக நம்மில் ஒருவராக இருக்கிறார். இயேசு செய்த புதுமைகள் அனைத்துமே, கடவுள் வாழ்வைக் கொடுக்க வந்ததன் முன்னடையாளமாக இருக்கிறது. வாழ்வை கொடுக்க வந்தவர் கடவுள், என்கிற கருத்தின் உண்மையை நாம் உணர வேண்டும், என்பதே இந்த நற்செய்தி பகுதி, நமக்கு தரக்கூடிய செய்தியாகும்.
இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கும் நாம் அனைவரும், இயேசு வழியாக கடவுள் நமக்கு கொண்டு வந்திருக்கிற வாழ்வை உணர வேண்டும். அவர் தருகிற அருளை நாம் பெற்றுக் கொள்வதற்கு, இயேசு மீது நாம் வைக்கக்கூடிய நம்பிக்கை அவசியமாகிறது. நாம் இயேசு மீது வைத்திருக்கிற நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டி, இந்த நாளில் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்