இயேசு தரும் கொடை
பெறுவதை விட, கொடுத்தலே மிகச்சிறந்தது. இயேசு இந்த உலகத்திற்கு தன்னையே கொடுக்க வந்தார். அதை முழுமையாகக் கொடுத்தார். அதை மகிழ்வோடு கொடுத்தார். நிறைவோடு வாழ்ந்தார். இன்றைய நற்செய்தியிலும், இயேசுவைத்தேடி பல நோயாளிகள் வந்தார்கள் என்று வாசிக்கிறபோது, இயேசுவைப் பற்றி இப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது. இயேசுவிடம் மக்கள் கண்ட பரிவு, பாசம், அன்பு தான், இத்தனை மக்கள் அவரைத் தேடி வரக்காரணமாக அமைந்திருந்தது.
வந்தவர்கள் அனைவருமே, இயேசுவிடமிருந்து எந்த அளவுக்குப் பெற்றுக்கொள்ள முடியுமோ, அதைப் பெற்றுக்கொள்வதில் கவனமாக இருந்தார்கள். ஆனால், பெற்றுக்கொண்ட அருளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு மனம் வரவில்லை. தொடர்ந்து இயேசு காட்டிய அந்த வழியிலும் வாழ அவர்கள் தயாராக இல்லை. தங்களது கடமை முடிந்தவுடன், தங்களது தேவை நிறைவேற்றப்பட்டவுடன், அவரை மறந்துவிடுகிறார்கள்.
நமது விசுவாச வாழ்விலும், இந்த மனநிலையை அதிகமாகப் பார்க்கிறோம். இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டு, பெற்றுக்கொண்டிருக்கிற கொடைகளுக்கு பல வேளைகளில் நாம் உண்மையாக இருப்பதில்லை. அதை மற்றவர்களுக்கும் கொடுத்து, அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதில்லை. பெற்றுக்கொண்ட அருளை, பயன்படுத்தி, இறைவல்லமை பலுகச்செய்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்