இயேசு சந்தித்த சவால்கள்
”கடவுள் ஏன் இப்படி தொடர்ந்து எனக்கு சோதனைகளை தந்து கொண்டிருக்கிறார்?” என்று நம்மில் பலபேர் புலம்புவதைக் கேட்டிருப்போம். அடுக்கடுக்காக அவர்கள் வாழ்வில் சந்தித்த துன்பங்களின் பாரம் தாங்காமல், அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள் தான் இவை. ஆனால், இயேசுவின் வாழ்வை நாம் சற்று சிந்தித்துப்பார்த்தால், அவரது மூன்றாண்டு பணிவாழ்வின் ஆழத்தை நாம் பார்த்தால், ஒரு மனிதன் இவ்வளவு துன்பங்கள், சவால்களுக்கும் மத்தியில் நேர்மையாக, உண்மையாக, கொண்ட கடமையில் கண்ணும் கருத்துமாக வாழ முடியுமா? என்று நாம் ஆச்சரியப்படுவோம். அந்த அளவுக்கு இயேசு ஒரு நிறைவாழ்வை வாழ்ந்திருக்கிறார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தீய ஆவி பிடித்திருந்த மனிதனை எதிர்கொள்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம் என்றால், கடலின் சீற்றத்திலிருந்து தனது சீடர்களை பாதுகாப்பாக கரைசேர்த்திருக்கிறார். அதிலிருந்து நிலத்திற்கு வந்தவுடன் தீய ஆவியை எதிர்கொள்கிறார். ஒரு பக்கத்தில் சதுசேயர், பரிசேயர், மறைநூல் அறிஞர் என, அதிகாரவர்க்கம் இயேசுவை பழிவாங்க காத்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கத்தில், பொதுமக்கள் இயேசுவை பைத்தியக்காரன், மதிமயங்கிப் பேசுகிறான் என்று பழிபேசுகிறது. இன்னொருபுறத்தில் இயற்கையின் சீற்றத்திற்கு எதிராகப் போராடுகிறார். இன்றைய நற்செய்தியில் தீய ஆவிக்கெதிராக இயேசு செயலாற்றுகிறார். இவ்வாறு அவர் சந்தித்த நிகழ்வுகள் ஒவ்வொன்றுமே துன்ப அனுபவத்தையும், சவாலையும் இயேசுவுக்குக் கொடுத்தது. ஆனால், இயேசு அதைரியப்படாமல், சோர்ந்து போகாமல், துவண்டுபோகாமல் கடமையை பொறுமையாக, நிதானத்தோடு செய்கிறார்.
நமது வாழ்வில் தொடர்ந்து துன்பங்களையும், சோகங்களையும் சந்திக்கிறபோது, நாம் துவண்டுபோகக்கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். சவால்களை துணிவோடு சந்திக்க வேண்டும். அப்போது நிச்சயம் நமக்கு வெற்றி உண்டு.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்